வெள்ளச்சேரியாக மாறிய வேளச்சேரி.. மக்களிடம் வசமாக சிக்கிய காங்., எம்எல்ஏ : வீடியோ வெளியிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 10:59 am

வெள்ளச்சேரியாக மாறிய வேளச்சேரி.. மக்களிடம் வசமாக சிக்கிய காங்., எம்எல்ஏ : வீடியோ வெளியிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம்!!

சென்னையின் மையப்பகுதியில் உள்ள நகரமாக வேளச்சேரி உருவெடுக்கும் என்பதை 1998ம் ஆண்டுகளிலேயே 2000களில் சொல்லியிருந்தால் நிச்சயம் சிரிப்பார்கள். அப்படித்தான் இருந்தது. ஆனால் அடுத்த 20 வருடத்தில் தலை கீழாக மாறியது. சென்னையின் மிக முக்கியமான வணிக மையமாகவும், பல லட்சம் பேர் வாழும் நகரமாகவும் உருவெடுக்க போகிறது என்பதை கணித்திருக்க மாட்டார்கள். ஆனால். இதெல்லாம் நடந்தது. சிறந்த ரயில் கட்டமைப்பு, பேருந்து வசதி, 10 நிமிடத்தில் விமான நிலையம், 5 நிமிடத்தில் கடற்கரை, சுற்றிலும் ஐடி நிறுவனங்கள், திரும்பிய பக்கம் எல்லாம் தரமான சாலை என மாறியதால் சென்னையின் ஐடி நகரமாக வேளச்சேரி மாறியது.

ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் வேளச்சேரி மிகவும் பள்ளமான பகுதி, இங்கு வீடு கட்டி குடியேறிய அத்தனை பேருக்கும் 2015ல் தான், வேளச்சேரி பள்ளமான பகுதி என்பதே தெரியும். முதல் மாடி அளவிற்கு தண்ணீர் வந்தது. அப்போது ஏற்பட்ட பாதிப்புக்கு பின்னர் வேளச்சேரியில் சில பணிகள் நடந்திருந்தாலும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வழக்கம் போல் மக்கள் படகில் பயணிக்க வேண்டிய நிலை தான் ஏற்பட்டது.

ஏனெனில் சிக்கல் என்னவென்றால் வேளச்சேரி ஏரி நிறைந்தாலும், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ஏரி நிறைந்தாலும், எல்லாமே வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒட்டிய பள்ளிக்கரணை ஏரிக்குத்தான் செல்லும். இதில் வேளச்சேரி ஏரி முதல் வேளச்சேரி ரயில் நிலையம் வரை உள்ள ஏஜிஎஸ் காலணி, ராம் நகர் பகுதிகள் மிகவும் பள்ளமான பகுதிகள் ஆகும். இங்கு சிறிய வெள்ளம் வந்தாலே தண்ணீர் தேங்கும்.. இந்த பகுதிகள் இந்த முறையும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் வேளச்சேரி பகுதிகளில் அவதிப்பட்டு வருகிறார்கள். வெள்ளம் தேங்கிய பகுதிகள் எல்லாமே வேளச்சேரியில் விஐபி பகுதிகள். சொகுசு வீடுகள் நிறைந்த பகுதிகள் ஆகும். தரமான சாலைகள் இருந்தாலும் தண்ணீர் வெளியே வழிஇல்லாத காரணத்தால் பாதிப்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா நவம்பர் 30ம்தேதி சொன்னதையும், டிசம்பர் 5ம் தேதி நடந்ததையும் வீடியோ வெளியிட்டு அவரை எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சித்து வருகிறார்கள்.

கடந்த 30ம் தேதி எம்எல்ஏ ஹசன் மௌலானா கூறுகையில், மழை நீர் வடிகால் வேலை முழுக்க முழுக்க முடிச்சாச்சு.. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் மழை நீர் வடிகால், கழிவு நீர் வடிகால் சிறப்பாக செய்து கொடுத்ததால் தான் இந்த முறை வேளச்சேரியில் தண்ணீர் தேங்காமல் உள்ளது. இல்லை என்றால் ஏஜிஎஸ் காலணி, ராம் நகரில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கும்.. படகில் போக வேண்டிய அவல நிலை இருக்கும்.. இப்ப மக்கள் நடந்து தான் வருகிறார்கள்.. தண்ணீர் நிற்கும் இடங்களில் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடித்து சரி செய்தால் தண்ணீர் நிற்க வாய்ப்பு இல்லை என்றார்..

டிசம்பர் 5ம் தேதி பெருமழைக்கு பின்னர் பேசிய எம்எல்ஏ ஹசன் மௌலானா, இயற்கை பேரிடரால் இவ்வளவு பெரிய மழை பெய்யும் போது இதெல்லாம் சாதாரணமாக நடக்கும்.. நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வேளச்சேரி ஏரி உயரம் கூடும் போது, தண்ணீர் ஊருக்குள் வரத்தான் செய்யும்.. அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நம்மால் முடிந்ததை செய்திருக்கிறோம். தண்ணீர் கடலுக்கு போகிறது. கடல் தண்ணீரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும் என்று கூறினார். இதனை ட்விட்டரில் வெளியிட்டு எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!