ரயில் மூலம் கஞ்சா கடத்திய இளைஞர் கைது : ரூ.3.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 8:51 am
Quick Share

வேலூர் : பயணிகள் இரயில் மூலம் கஞ்சா கடத்திய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞரை சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப் புலனாய்வு பிரிவு துறையினர் கைது செய்தனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதை பொருள் கடத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இரயில்கள் மூலம் கஞ்சா கடத்துவதில் முக்கிய பாதையாக இருந்து வருவது காட்பாடி வழித்தடம்.

இந்நிலையில், சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப் புலனாய்வு பிரிவினர் டாடா நகரில் இருந்து காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பொது பெட்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து அவரிடம் இருந்த இரண்டு பைகளை பரிசோதித்தபோது, அதில் எட்டு பொட்டளங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, கடலூர் மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த கபிலன் என்ற அந்த 23 வயது இளைஞரை கைது செய்த சென்னை ரயில்வே குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரிடம் இருந்து சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைதான இளைஞரை காட்பாடியில் உள்ள போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 614

0

0