ஈஷா சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்… வேலூரில் வரும் 10 ஆம் தேதி நடத்த ஏற்பாடு..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 12:00 pm

ஈஷா கிராமோத்வசம்’ திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் வேலூர் வாலாஜா ஆண்கள் அரசு மேல் நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று (செப்.7) நடைபெற்றது. இதில் ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டையில் உள்ள வன்னிவேடு பகுதியில் அமைந்திருக்கும் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியும் மற்றும் இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன.
வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், த்ரோபால் போட்டியில் மொத்தம் 10 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 6 அணிகளும் பங்கேற்க உள்ளன.

இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். இதை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.

இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது, இவ்வாறு அவர் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!