மனிதர்களுக்கு போலவே குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்த கிராமம் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய செயல்..!

8 September 2020, 7:21 pm
monkey dead 1- updatenews360
Quick Share

வேலூர் : காட்பாடி அருகே இறந்த குரங்கை ஒரு மனிதனுக்கு ஈமச்சடங்கை செய்வது போல் அப்பகுதி இளைஞர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காட்பாடி அடுத்த இளையநல்லூர் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான ஆலமரம் ஒன்று பேருந்து நிலையத்தில் உள்ளது. இந்த ஆலமரத்தில் குரங்குகள் வந்து தஞ்சம் புகுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த ஆலமரத்தில் தஞ்சம் புகுந்த குரங்கு ஒன்று, சாலையில் சென்ற வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் குரங்கு குட்டியை மீட்டு கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர், நன்கு குணமடைந்த குரங்கானது அப்பகுதி மக்களிடையே இளைஞர்களையும் மேல் ஏறி பாசத்துடனும், நேசத்துடனும் சகஜமாக விளையாடி பொதுமக்களை கவர்ந்து, தனது பொழுதினை போக்கி வந்தது.

இந்த சூழ்நிலையில், அந்த குரங்கானது பரிதாபமாக இன்று இறந்து விட்டநிலையில், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சோகத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மனிதன் இறந்து விட்டால் எப்படி ஈமசடங்கு செய்வார்களோ, அதேபோல் அந்தக் குரங்கிற்கு மேளதாளம் ஒப்பாரி வைத்து, அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகிலேயே அதனை மரியாதையுடன் பக்தியுடனும் அடக்கம் செய்தனர்.

இந்தக் காலகட்டத்தில் மனிதர்களுக்கே ஈமசடங்கு செய்வதை பலர் தவிர்த்து ஒதுக்கி வரும் சூழ்நிலையில், ஒரு கிராம மக்கள் குரங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியது அனைவரின் நெஞ்சையும் நெகிழ வைக்கும் ஒரு சம்பவமாகவே பார்க்கப்பட்டது.

Views: - 0

0

0