தமிழகத்தில் அதிமுக தான் தலைமை… விஜய் இணைவாரா என்பது விரைவில் தெரியும் : டிடிவி சஸ்பென்ஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2025, 4:53 pm

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கு கொள்வதற்காக வருகை தந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ராஜ கண்ணப்பன் நீண்ட நாள் அரசியல் அனுபவம் உள்ளவர். அவர் நிலை தடுமாறி இருக்கிறார்களா என தெரியவில்லை. இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமித்ஷா பல முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் விஜய் கூட்டணியில் இணைவது குறித்து தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார் காத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும் திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். உறுதியாக கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான் என நான் நம்புகிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து திமுக கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள். எங்கள் கூட்டணி தினம் தினம் வலுப்பெற்று வருகிறது திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் உறுதியாக எங்கள் அணிக்கு வரும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கனவே கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பாஜக மட்டுமே உள்ளதாக கூறுவது அச்சத்தின் காரணமாகத்தான் கூறுகிறார்கள்.

தமிழகத்தின் இன்றைய நிலையை பார்த்தால் 2036 ல் அல்ல 2026 லேயே திமுக ஆட்சிக்கு வராது.பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்தது குறித்து அவர்கள் இருவரிடம் தான் கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாக தான் பதில் அளித்துள்ளார்.

திமுகவை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என அமித்ஷா முயற்சி செய்தார் 2021லும் அவர் முயற்சி செய்தார் 2026-ல் அது பலன் அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையூறு வரும் வகையில் ஏதாவது கருத்து சொன்னால் அது நாகரீகமாக இருக்காது. உரிய தொகுதிகளை தேர்தல் நேரத்தில் பெற்று நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து ஏன் கூறவில்லை என அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பாமக தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்பது குறித்தான ஜோசியம் எனக்கு தெரியாது. எங்களின் ஒரே இலக்கு திமுக ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவது தான்.

போதை பொருள் பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழும் நிலையில் உள்ளார்கள். தமிழ்நாடு போதை பொருள் சந்தையாக மாறி உள்ளது. இதை சரி செய்யாமல் மூன்று தேர்தல் குறித்து கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் பதவி கேட்பீர்களா என்கிற செய்தியாளர் கேள்விக்கு, தற்பொழுது தான் கூட்டணி பலப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!