“நீட் தேர்வு விலக்கில் ஆளுநரின் உள்நோக்கம் என்ன? முற்றுகை போராட்டம் நடத்துவோம்” : எஸ்.எஃப்.ஐ எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 4:25 pm
SFI - Updatenews360
Quick Share

கோவை : நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இயற்றியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் 27ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜ.க அரசின் கல்வி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீட் தேர்வு காரணமாக 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். தமிழக அரசு நீட் விலக்கு சட்ட மசோதா இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது.

கடந்த ஆட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றபட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்த சூழலில் ஆளுநர் சட்ட மசோதாவிற்க்கு அனுமதி அளிக்காமல் இருப்பதன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு தொடர்ச்சியாக உடைக்கபட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கபடுவதால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யபட வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மத்திய குழு அக்டோபர் 27ம் தேதி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. தமிழகத்தில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக கல்வி துறையில் மோசமான நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் தேசிய கொள்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

3,8 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கபட வேண்டும் என்பதை மாற்றி வினாடி-வினா என்ற தேசிய கொள்கையையும் அனுமதிக்க முடியாது.

இல்லங்களுக்கு கல்வியை கொண்டு செல்லும் விதமாக மக்கள் கல்வி என்ற பெயரில் 200 கோடி ரூபாய் ஒதுக்கபட்டு நவம்பரில் பள்ளிகள் துவக்கபடும் என்ற தேசிய கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திற்கு என தனியாக கல்வி கொள்கையை வகுக்க வேண்டும். அரசு கல்லூரிகள் துவங்கபட்டாலும் ஆசிரியர்கள் நியமிக்கபடாமல் உள்ளனர். கடந்த ஆட்சியில் துவங்கபட்ட 10 கல்லூரிகளில் தற்போது வரை ஒரு துறைக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். தற்போது வரை அதே நிலை தொடர்கிறது.

தமிழகத்தில் 35 கல்லூரிகளில் முதல்வர்களே இல்லாத நிலை தொடர்கிறது. 153 அரசு கல்லூரிகளில் 7000 ஆசிரியர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக நியமனம் செய்யபடாமல் உள்ளனர்.

அரசு கல்வி நிறுவனங்களை பாதுகாக்க அரசு உடனடியாக முன் வரவேண்டும். தேசிய கல்வி கொள்கையை வேறு ஒரு பெயரில் நடைமுறைப்படுத்த முயல்வதை இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 112

0

0