செல்போன்கள் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்..? காணாமல் போன 141 செல்போன்களை மீட்ட மாவட்ட எஸ்.பி விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2021, 12:25 pm
கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைந்து போன செல்போன்களை மீட்ட போலீசார் அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி சுஹாசினி தலைமையிலான போலீசார் தொலைந்து போன செல்போன்களை மீட்டனர்.
அவற்றை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவரிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 141 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறியதாவது: கோவை மாவட்டம் முழுவதும் தொலைந்து போன செல்போன்கள் குறித்து புகார் கிடைத்ததும் சி.எஸ்.ஆர் பதிவு செய்து அதனை மீட்கும் முயற்சியில் கோவை மாவட்ட காவல்துறை இறங்கியுள்ளது.
கடந்த மாதம் 125 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து 347 புகார்கள் நிலுவையில் இருந்தன. அதில் 141 செல் போன்கள் தற்போது மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடிப்பது சிரமமான விஷயம். இதற்கு கால தாமதம் ஏற்படலாம். ஆனால் செல்போன் தொலைந்து போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன செல்போன்களையும் மீட்டுள்ளோம். செல்போன்களை தொலைத்தவர்களிடம் கேட்ட கருத்துக்களின் படி, அவர்கள் அஜாக்கிரதையாக இருந்தது தெரிய வருகிறது. எனவே பொது இடங்களில் செல்போன்களை வைக்காமல் கவனமாக இருக்கவும்.
அதேபோல் செல்போன் கடை வைத்திருப்பவர்களிடம், ஒரே நபர் மீண்டும் மீண்டும் செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். செல்போன்கள் தொலைந்து போனால் ‘டிஜி-காப்’ என்ற செயலி மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0
0