முதல் விக்கெட்… ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் யார் போட்டி?

Author: Hariharasudhan
7 January 2025, 5:52 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி மற்றும் தவெக சார்பில் போட்டியிடுவது குறித்து முதற்கட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது” என அறிவித்தார். இதன்படி, இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்டும்.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும். மேலும், வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

Erode East By Elections 2025

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதேநேரம், ஆளும் திமுக உடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் என ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

அதேபோல், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக போட்டியிடுவது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக அதிகார துஷ்பிரோயகத்தில் ஈடுபடும். தேர்தல் ஜனநாயக மரபுப்படி நடக்காது. இந்த விஷயத்தில் வேறு எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா….மேடையில் நடிகர் கலையரசன் பரபரப்பு பேச்சு..!

மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுவது குறித்து பேசிய, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து, விரைவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்போம்” என கூறியுள்ளார்.

தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்றும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டே பணியாற்றி வருவதாகவும் அக்கட்சித் தலைமை அறிவித்து தெளிவுபடுத்தி உள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!