முதலமைச்சர் டெல்லி செல்வது ஏன்? எல்லாமே அதுக்காகத்தான்.. பரபரப்பை கிளப்பிய வானதி சீனிவாசன்!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2025, 6:54 pm
ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு கோவை விமான நிலையம் வந்தடைந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், இந்த பயணம் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை பலப்படுத்தும் விதமாக அமைந்ததாகவும், ஆஸ்திரேலியா அரசின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்தும், அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு பயனுள்ளதாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, ‘ஆஸ்திரேலிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற special visit program எனும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நான் கலந்து கொண்டேன்.
இதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு வார கால பயணத்தில் ஆஸ்திரேலிய அரசின் நடைமுறைகள், அமைச்சக செயல்பாடுகள், அரசின் கொள்கைகள் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.

இப்போதும் அந்த நாட்டில் வாக்குச்சீட்டு முறைதான் நடைமுறையில் உள்ளது. அதை எப்படி அமல்படுத்துகிறார்கள் என தெரிந்து கொண்டேன்.
மேலும், இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்து பேசப்பட்டது. அரசியலில் பெண்களின் முக்கியத்துவம், பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் மகளிருக்காக வழங்கிவரும் திட்டங்கள், பாலின சமத்துவம், பெண்கள் மீதான வன்முறை என பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.
புதிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொண்டேன்.ஆஸ்திரேலியாவின் உயர் கமிஷனர் அவர்களை கோவைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.
இந்த பயணம் இந்தியா ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் வகையிலும், குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அதிக மாணவர்கள் பயில்கின்றனர் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பலம்பெறும் விதமாகவும், ஆசியா பசபிக் பகுதிகளில் நடைபெறும் ராணுவ உறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் அமைந்தது.
பிரதமர் மோடி சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றபோது லிட்டில் இந்தியா என அங்குள்ள பகுதிக்கு பெயர் சூட்டி அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளார்.
அந்த நாட்டு மக்கள் பிரதமர் மோடி குறித்து அதிகமாக விசாரிக்கின்றனர். அவரது ஆட்சியை வெகுவாக பாராட்டுகின்றனர்’ என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், ‘நிதி ஆயோக் கூட்டத்தை இதுவரை புறக்கணித்து வந்த முதல்வர் இப்போது செல்கிறார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை.
நிதி ஆயோக் கூட்டம் என்பது மிகவும் முக்கியமான ஒரு கூட்டமாகும். இதில் மாநிலங்களின் தேவை, மாநிலங்களில் அமல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஆகியவை கேட்கப்படும்.
நமது மாநிலத்தின் கருத்தை தெரிவிக்க வேண்டிய ஒரு கூட்டமாகும். மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த பாரபட்சமும் இன்றி நிதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

கோவை மருதமலை அருகே காட்டு யானை உயிரிழந்த விவகாரம் குறித்து பேசியவர், ‘கோயம்புத்தூர் மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு மற்றும் மனித மிருக மோதல் பிரச்சனைகள் பலமுறை நடந்து வருகிறது. இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன்.
அரசு இதை தடுப்பதற்கான விரிவான திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக வன எல்லை பகுதிகளில் பிளாஸ்டிக் கொட்டுவதை முற்றிலுமாக தவிர்க்குமாறு வலியுறுத்த வேண்டும். அதனை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
