விபரீதத்தில் முடிந்த குடும்ப தகராறு.. தன்னை அடித்த கணவனை கடப்பாரையால் அடித்து கொன்ற மனைவி போலீஸில் சரண்!!
Author: Babu Lakshmanan28 September 2022, 11:49 am
ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் கணவனை மனைவி தலையில் அடித்து கொலை செய்து விட்டு போலீஸில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த உரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீராளன்(35). இவரது மனைவி ஷோபனா(30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளாகின்றன.

சீராளன் உரியூர் கிராமத்திலேயே மனைவி ஷோபனா பெயரில் சர்வீஸ் நடத்தி வந்தார். சீராளன் நாள்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வருவதால் அடிக்கடி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சீராளனுக்கு அதே பகுதியில் உள்ள மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் குடிபோதையில் வந்த சீராளனுக்கும், மனைவி ஷோபனாவிற்கு தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது மனைவி வேறு பெண்ணுடன் உள்ள தொடர்பு குறித்து கேட்டதால் ஆத்திரமடைந்த சீராளன் மனைவியை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி ஷோபனா, கணவன் தலையில் கல்லை போட்டும் கடப்பரையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சீராளன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
கணவனை அடித்து கொலை செய்த மனைவி ஷோபனா, அதிகாலையில் திருவள்ளுர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
மப்பேடு போலீஸார் அளித்த தகவலின் பேரில் தக்கோலம் போலீஸார் விரைந்து சென்று உரியூர் கிராமத்தில் இறந்து கிடந்த சீராளன் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து, மனைவி ஷோபனாவை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இறந்த சீராளனுக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர்கள்.