கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவி போட்ட திட்டம் : வெச்ச குறி தப்பியதால் கம்பி எண்ணும் கும்பல்!!!

Author: Udayachandran
27 July 2021, 5:28 pm
Illegal Contact -Updatenews360
Quick Share

கோவை : கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க கணவனை கழுத்தறுத்து கொல்ல முயற்சி செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த மனுஷன் என்பவரின் மகன் சேது ராஜாராம் சிங் (வயது 29). இவர் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். இவருக்கும் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா (வயது 25) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சௌந்தர்யா இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சேது ராஜாராம் சிங்கிற்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. இதனால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவதுடன் சந்தோசமாக இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சௌந்தர்யாவுககு நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் குணசேகர் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. குணசேகர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

சௌந்தர்யா குணசேகர் இடம் தனது கணவர் தன்னிடம் அன்பாக இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதைப் பற்றி அறிந்த சேது தனது மனைவி சௌந்தர்யாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சௌந்தர்யா மறுத்ததோடு கணவரோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை எழுந்தது. இதில் சேது ராஜாராம் சிங் சௌந்தர்யாவை  அடித்து உதைத்தார். இதையடுத்து சௌந்தர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் சேது ராஜாராம் சிங் மீது புகார் அளித்தார்.

தொடர்ந்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் கணவன் மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். சௌந்தர்யா சிங்காநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

அப்போது சௌந்தர்யாவிடம் செல்போன் மூலம் பேசிய குணசேகர் நீ இல்லாமல் வாழ முடியாது என்று கூறி புலம்பியுள்ளார். மேலும் தன்னுடன் வந்து விடுமாறு கூறியுள்ளார். அப்படி வராவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் குணசேகரன் கூறியுள்ளார்.

இதையடுத்து சௌந்தர்யாவை குணசேகரன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு தடையாக உள்ள சேது ராஜாராம் சிங்கை கொலை செய்து விடலாம் என திட்டம் தீட்டினர். இதற்கு உறுதுணையாக சௌந்தர்யாவின் சகோதரர் மற்றும் குணசேகரன் நண்பர்களை அழைத்து ஆலோசனை செய்தனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு குணசேகர் அவருடைய நண்பர்கள் மூர்த்தி, அன்பு, மதன்குமார் மற்றும் சௌந்தர்யாவின் சகோதரர் ஆகாஷ் ஆகியோர் சேது ராஜா ராம் சிங் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் குடி போதையில் மயக்கநிலையில் சேது ராஜாராம் சிங் தூங்கிக் கொண்டிருந்தார் .

இவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து முகத்திலும் கத்தியால் குத்தினர். இதில் அவர் சத்தம் போட்டு கத்தவே மறைந்திருந்த சௌந்தர்யா வீட்டிற்கு வந்தார். காயமடைந்த கணவனை குடிபோதையில் தவறி விழுந்து விட்டார் என கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக சௌந்தர்யா நாடகமாடி அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சேது ராஜாராம் சிங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சேது ராஜாராம் சிங்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது சேது ராஜாராம் சிங் நடந்தவற்றை கூறினார்.

இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் சேது ராஜா ராம் சிங்கின் மனைவி சௌந்தர்யா (வயது 25 ),அவரது கள்ளக்காதலன் குணசேகர் (வயது 23), மூர்த்தி( வயது 17), உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் அன்பு(வயது 16), உப்பிலிபாளையம் சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் மதன்குமார் (வயது 18), மற்றும் சௌந்தர்யாவின் தம்பி மாதவன் என்பவரின் மகன் ஆகாஷ் (வயது 17 )ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதல் கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 372

0

0