மூடப்பட்டுள்ள விஸ்கோஸ் ஆலையில் காட்டு யானைகள் தஞ்சம் : விளைநிலங்களில் புகுந்ததால் வாழைகள் சேதம்!!

18 May 2021, 6:54 pm
Viscose Elephants- Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே காட்டு யானைகள், வாழைத் தோட்டங்களில் புகுந்து, 2,500 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்துள்ளதால் வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே கணேசபுரம், அன்னதாசம்பாளையம், மூளையூர், கூத்தம்பட்டி பிரிவு, அம்மன்புதூர் உட்பட சுற்றியுள்ள கிராமங்களில், விவசாயம் பிரதான தொழிலாகும்.

இப்பகுதி விவசாயிகள் கதலி, நேந்திரன், செவ்வாழை, பூவன் ஆகிய வாழை ரகங்களை பயிர் செய்து வருகின்றனர். சிறுமுகை விஸ்கோஸ் ஆலை மூடி, 18 ஆண்டுகள் ஆனதால், முள் மரங்கள் வளர்ந்து, வனப்பகுதி போல் காட்சி அளிக்கிறது.

மூளையூர் வனப்பகுதியில் உள்ள யானைகள், இரவில் பவானி ஆற்றை கடந்து வந்து, விஸ்கோஸ் ஆலை வளாகத்தில் தங்கிக் கொள்கின்றன. அங்கிருந்து இரவில் வெளியே செல்லும் யானைகள், வாழைத் தோட்டங்களில் புகுந்து, மரங்களை சேதம் செய்து வருகின்றன.

இது குறித்து சிறுமுகை கணேசபுரத்தை சேர்ந்த விவசாயி சின்னராஜ் கூறியதாவது : விஸ்கோஸ் ஆலையில் வளாகத்தில் வளர்ந்துள்ள முள் மரங்கள், புதர் போல் வளர்ந்துள்ளன. இங்கு தங்கியுள்ள யானைகள், இரவில் அருகே உள்ள வாழைத் தோட்டங்களில் புகுந்து, வாழைத் தண்டுகளை சாப்பிட்டு சேதம் செய்து வருகின்றன.

விவசாயிகளுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் விஸ்கோஸ் ஆலை வளாகத்தில் உள்ள யானைகள், வெளியே வருவதை தடுக்க வேண்டும். அல்லது ஆலை வளாகத்தில் தங்கி இருக்கும் யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கூறினார்.

Views: - 69

0

0