மூடிக்கிடக்கும் செங்கல் சூளைகள் திறக்கப்படுமா? கோவை ஆட்சியரிடம் உரிமையாளர்கள் மனு!!

4 May 2021, 2:14 pm
Sengal Soolai -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் இயங்கும் செங்கல் சூளைகளை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை பின்பற்றி திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியரிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

கோவை தடாகம் அதன் சுற்று வட்டாரத்தில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள், தொடர்ந்து இயங்க தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமையம்பாளையம், வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஊராட்சிகளில், 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக புகார் எழுந்தது வந்தது, செங்கல் சூளைகளின் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், வருவாய் துறையினர் மற்றும் போலீசாருடன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் இன்ஜினியர் ஜெயலட்சுமி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் ஆகியோர், செங்கல் சூளை இயக்கத்துக்கு தடை விதிக்கும் அறிவிக்கையை, 22க்கும் மேற்பட்ட சூளைகளில் ஒட்டி சென்றுள்ளனர்.

சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள், சேம்பர்கள், கடந்த 19ம் தேதி முதல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

22க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, அனுமதி பெற்ற செங்கல் சூளைகளை இயங்க அனுமதிக்க வேண்டும் என்று செங்கல் சூளை, உரிமையாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துறை சார்ந்த அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இது குறித்து அறிக்கை பிறப்பிக்க படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக, செங்கல் சூளை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மனு அளிக்கும் போது, கோவை பாராளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சிஆர் ராமச்சந்திரன், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் விகேவி சுந்தரராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 88

0

0