‘மாஸ்க் இல்லைன்னா அபராதம்’ : கோவையில் போலீசாருடன் இணைந்து மாநகராட்சி அதிரடி!!

8 September 2020, 3:53 pm
Cbe NO Mask Spot Fine - updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு போலீசார் உதவியுடன் மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பிறப்பித்து உள்ளார்.

முக கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவோர், பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த காந்திபுரம் பகுதியில் முக கவசம் அணியாமல் நடந்து செல்வோர், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் முக கவசம் இன்றி செல்வோரை காட்டூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் மாநகராட்சியினர் தனி நபர்க்கு 100 ரூபாய் என்று அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும் முக கவசமின்றி வருவோருக்கு போலீசார் முக கவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதே போல் கோவையின் பல்வேறு பகுதியில் அபராதம் விதிக்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 0

0

0