பெண்கள் போராட்டம் : டாஸ்மாக் கடையை திறக்க முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்!!
10 September 2020, 5:38 pmஈரோடு : சத்தியமங்கலம் காந்திநகர் குடியிருப்பு பகுதிக்குள் அமையவுள்ள புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அரசு போக்குவரத்து கழகம் அருகில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கொண்ட காந்திநகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதிக்குள் அமையவுள்ள புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் மாதத்தில் முற்றுகை மற்றும் மறியல் போராட்டங்களை பொதுமக்கள் நடத்தினர். இதன் விளைவாக அந்த இடத்தில் டாஸ்மாக் கடை வராது என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து மீண்டும் எட்டு மாதங்களுக்கு பிறகு அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. உடனடியாக அங்கு திரண்ட 200க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து சுமார் ஐந்து மணி நேரமாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடை திறப்பதை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் இன்று காலை டாஸ்மாக் திறக்க மதுபாட்டில்களுடன் வந்த அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். கடையை திறக்க விட மாட்டோம் என கடை முன்பு அமர்ந்து மாலை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான போலீசாரை வைத்து கடையை திறக்க முயற்சித்த அதிகாரிகள் கடையை திறக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் காந்திநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0
0