வீடுகளுக்குள் புகுந்த சாக்கடை கழிவுநீர்… நடவடிக்கை கோரி சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் குழந்தைகளோடு கைது…!!

Author: kavin kumar
8 January 2022, 5:06 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை சரி செய்யாததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை குழந்தைகளுடன் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட குடை பாறைப்பட்டி அருகே உள்ள அந்தோணியார் கோவில் முதல் தெரு பகுதியில் 150 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த நிலையில் திண்டுக்கல் பேகம்பூர் இலிருந்து வத்தலகுண்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியின் போது பிரதான சாக்கடை வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டது. வாய்க்கால் கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை தூர்வாரப்படாமல், கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்யாமலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அவ்வப்போது மழை பெய்யும் போது பேகம்பூர், குடைபாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அந்த பிரதான கழிவு நீர் வாய்க்காலில் வந்து சாக்கடை கால்வாயில் செல்லாமல் வழிந்து அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

இதன் காரணமாக நோய்த் தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து பொதுமக்கள் இன்று திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் தாங்கள் சிகிச்சை பெற்ற மருந்து மாத்திரைகளை சாலையில் கொட்டி போராடினர் தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை குழந்தைகளுடன் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 334

0

0