தமிழகத்தில் XE வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 5:41 pm
Quick Share

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் இன்று நடைபெற்ற வட்டார மருத்துவ முகாம் துவக்க விழா, மற்றும் 1.25 கோடி மதிப்பீட்டில் துணைசுகாதார நிலையங்கள் மற்றும் செவிலியர் குடியிருப்பு திறப்பு விழா மற்றும் நலதிட்ட உதவிகளை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் இன்று துவக்கி வைத்து நலதிட்ட உதவிகளை வழங்கினர்.

முன்னதாக சோளிங்கரில் பகுதியில் கண்பார்வை இழந்த யோகலட்சுமி, கை,கால்கள் செயலிழந்த பிரியதர்ஷினி ஆகிய இரு மாணவிகளை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :- தமிழகத்தில் இதுவரை கலைஞரின் வருமுன் காப்போம் என்ற பெயரில் ஒரே ஆண்டில் 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 8,64,934 நபர்கள் பலனடைந்திருப்பதாகவும், மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் வட்டார சுகாதார திருவிழா என்ற பெயரில் நடத்தப்படும் முகாம்கள் மொத்தம் 385 முகாம்கள் நடத்த திட்டமிட்டு 54 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 25,824 பேர் மருத்துவ பயன்பெற்று உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இருந்தபோதிலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

Views: - 889

0

0