காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் இருந்து விழுந்த யாளி சிற்பம் : இடி தாக்கியதாக பக்தர்கள் அதிர்ச்சி!!

3 July 2021, 10:03 am
Kanchi Temple - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : பிரசித்த பெற்ற காமாட்சியம்மன் கோவிலில் நேற்று மழை பெய்த போது பலத்த இடி சத்தத்தின் அதிர்வில் கோவில் தெற்கு கோபுரத்தின் மேல் உள்ள யாளி பொம்மை உடைந்து கீழே விழுந்ததால் இடி தாக்கியதாக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த இந்தக் கோயில் சில தினங்களுக்கு முன்னர்தான் திறக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக வந்திருந்தனர்.

அப்போது இடி, மின்னலால் மழை பெய்தது. திடீரென்று பலத்த சத்தத்துடன் இடி இடித்த போது கோயில் தெற்கு கோபுரத்தில் உள்ள யாளி பொம்மை உடைந்து கீழே விழுந்தது. இடிதாக்கியதால் பொம்மை கீழே விழுந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இந்த இடிச் சத்ததின்போது கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் 4 பேர் மயங்கி விழுந்தனர். யாளி பொம்மை கீழே விழும்போது யாரும் அருகில் இல்லாததால் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.

இது தொடர்பாக கோயில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, காமாட்சி அம்மன் தெற்கு கோபுரம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் இடிதாங்கி வைக்கவில்லை. இன்று இடி பக்கவாட்டில் விழுந்த காரணத்தினால் கோபரத்தின் உச்சியில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். இடி விழுந்திருக்க வாய்ப்பில்லை. பலத்த இடிச்சத்தத்தின் அதிர்ச்சியில் அந்த பொம்மை உடைந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Views: - 122

0

0