ஒரு நாள் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது : ராகுல் காந்தி சுளீர்!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2025, 2:09 pm
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து, தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளன.
65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல். இது ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்கும் ஆபத்தான செயல் என எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன.
ராகுல் காந்தியின் எச்சரிக்கை
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் தள பதிவில் தேர்தல் ஆணையத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “வாக்கு திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி அல்ல; இது இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான பெரும் குற்றம்! ஒரு நாள் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறும். அப்போது நீங்கள் தப்ப முடியாது.

இந்தியாவின் தேசத் தந்தைகள் உருவாக்கிய அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துவிட்டீர்கள். இனி உங்களை தொடவே விடமாட்டோம்!” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
“விவரங்களை வெளியிடுங்கள்!”
தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், இந்த மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும், உயர்நிலையில் இருந்தாலும், கடைநிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்துள்ளார்.
