இளம் தம்பதி சென்ற பைக் மீது லாரி மோதி விபத்து : மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2021, 7:19 pm
தேனி : கோடாங்கிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் தம்பதிகள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி அருகே ஆதி பட்டியைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவர் போடியில் உள்ள தனியார் மொபைல் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி ஜெயப்பிரியா உடன் போடியில் உள்ள மொபைல் கடைக்கு ஆதி பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது கோடங்கிபட்டி தேவர் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் முன்னே சென்ற அரசு பேருந்து நிற்பதை கண்டு தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார். சற்றும் எதிர்பாராத நிலையில் பின்னால் அதிவேகத்தில் வந்த லாரி அருண்பாண்டியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த அருண்பாண்டி மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருண்பாண்டி தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மனைவி கண்முன்னே இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த ஜெயபிரியாவை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயப்பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய லாரி மற்றும் விபத்துக்கு காரணமான அரசு பேருந்தினை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய திண்டுக்கல்லை சேர்ந்த லாரி ஓட்டுனர் காளிமுத்து (வயது 23) பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து இறந்த சம்பவம் தேனி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0