சாத்தான்குளம் போல மற்றொரு சம்பவம்? தஞ்சையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் அடித்துக் கொலை? பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 8:45 pm
Accused Murder - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : காவல் துறை விசாரணையில் இருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சாமிநாதன் வீட்டில் பத்து நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து 6 சவரன் நகைகள், ரூபாய் 6 லட்சம் ரொக்கம் திருட்டு சம்பவம் நிகழ்ந்தது.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள புதுப்பட்டினம் பழைய முதன்மைச் சாலையைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்தியவாணனை (வயது 34) தனிப்படையினர் பிடித்து, அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகேயுள்ள தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணை இடையே சத்தியவாணன் அதிகாலை உயிரிழந்தார். இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதையடுத்து தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

சத்தியவாணன் மீது ஏற்கெனவே திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, குற்றச் சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றுள்ள சத்தியவாணனின் விரல்ரேகைப் பதிவு காவல் துறையிடம் உள்ளது.

இந்தப் பதிவும், சாமிநாதன் வீட்டில் பதிவான விரல்ரேகையும் ஒத்துப்போனதாகவும், அதன் அடிப்படையில் சத்தியவாணனைப் பிடித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா காந்தபுனேனி விசாரணை நடத்தினர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தினர் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 176 (காவல் துறை விசாரணையின்போது உயிரிழப்பு) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சத்தியவாணனின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சகோதரி சண்முகப்ரியா, உறவினர் ஜெயபாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, சத்தியவாணன் எப்படி இறந்தார் என்பது குறித்து தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முகமது அலி தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.

Views: - 229

0

0