பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பறிபோன இளைஞரின் உயிர் : இருதரப்பு மோதலால் கொலை!!

11 January 2021, 2:51 pm
Birthday Murder - Updatenews360
Quick Share

வேலூர் : குடியாத்தம் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த ஹேமந்த்(வயது 21) என்பவர் ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் சாமரிஷிகுப்பம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று இரவு ஹேமந்த் மற்றும் அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது எம்.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ரீகன், ராபின், சின்னா ,ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்பொழுது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹேமந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ரீகன் ராபின், சின்னா, ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது.

அப்போது ரீகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக அவர்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் கூலி வேலை செய்யும் அஜித் (வயது 25 ) கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே அஜித் உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த அஜித்தின் சித்தப்பா வேலு மற்றும் அஜித்தின் நண்பர் சரவணன், தீலிப் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த அஜித்தின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ரீகன், ராபின், சின்னா , ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் எம்.வி. குப்பம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0