கல்லூரி மாணவிகளிடம் செல்போன் பறித்து செல்ல முயன்ற இளைஞர்கள்… தைரியமாக மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த மாணவிகள்..!!

Author: Babu Lakshmanan
11 April 2022, 12:12 pm

சென்னை : சாலையில் சென்ற மாணவிகளிடம் செல்போன் பறித்து தப்பி செல்ல முயன்ற திருடர்களை விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்த கல்லூரி மாணவிகள், அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 18-வது தெருவைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, தனது தோழியுடன் பெரம்பூர் லோகோ ஸ்கீம் இரண்டாவது தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மாணவியிடம் இருந்த 14,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை பிடுங்கிக் கொண்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றனர்.

அப்பொழுது இரண்டு கல்லூரி மாணவிகளும் கூச்சலிட்டு இருசக்கர வாகனத்தை விரட்டிச் சென்று கீழே தள்ளி ஒருவரைப் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து ஓடி விட்டார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பதும், அவர் உடன் வந்த நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (25) என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, சூர்யாவையும் கைது செய்த பெரவள்ளூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?