நடுரோட்டில் குரூப் சட்டையோடு இளைஞர்கள் ஆரவாரம்.. அதிருப்தியடைந்த பொதுமக்கள்!

Author: Hariharasudhan
1 November 2024, 2:10 pm

கோவையில் நடுரோட்டில் ஒரே வண்ண ஆடைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர், ஆபத்தான முறையில் தீபாவளி கொண்டாடியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: நேற்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம், புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என களைகட்டியது. அந்த வகையில், கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில், தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே மாதிரியான வண்ண உடைகளை அணிந்து தங்களது இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அவர்கள், பேருந்து நிலையத்தின் முன்பாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி, தீபாவளியை ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது, தங்களது இருசக்கர வாகன ஹாரன்களை இடைவிடாது ஒலிக்க வைத்து கூச்சலிட்டனர். அது மட்டுமல்லாமல், கைகளில் வண்ண வண்ண புகையை வெளியேற்றும் பட்டாசுகளை ஏந்தி ஒரு சிலரும், மேலும் ஒரு சிலர் சரவெடிகளை கைகளில் பிடித்துக் கொண்டு வெடிக்க வைத்தனர்.

இதனால் உடலில் பட்டாசு தீ விழுந்தவுடன், அதை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் முன்பாக வீசி எறிந்தனர். இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், தாங்கள் செல்வதற்கு வழி கிடைக்காமல் தவித்தனர். பின்னர், அவர்களும் சேர்ந்து ஹாரன்களை ஒலித்தபடியே இருந்ததால், அந்தப் பகுதியே திடீரென பரபரப்பாக காணப்பட்டது.

Celebrating diwali

இதில் ஒரு தம்பதியும் குழந்தையோடு இருந்தனர். மேலும், கைகளில் பட்டாசு வெடித்து, அதை வீசி எரிவதை பார்த்ததும், அங்கு பேருந்துக்காக நின்றிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர், சுமார் அரை மணி நேரம் பேருந்து நிறுத்தத்தின் முன்பாக தீபாவளியை ஆபத்துடனும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாடிய இளைஞர்கள், தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: பைக்கில் பட்டாசு எடுத்துச் சென்ற இளைஞர் பலி.. ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் சோகம்!

இதனையடுத்து, இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!