வாய்ப்பில்ல ராஜா.. வாத்தியார் தவறு செய்ய மாட்டார்.. அடித்துச் சொல்லும் சீமான்

Author: Hariharasudhan
2 November 2024, 3:52 pm

தம்பி என்ற உறவு வேறு, கொள்கையில் முரண் என்பது வேறு என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் விஜயை விமர்சித்துள்ளார்.

சென்னை: சென்னையில் இன்று (நவ.2) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மீண்டும் விஜயை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இது தொடர்பாக பேசிய அவர், “இருமொழிக் கொள்கை என விஜய் கூறுகிறார். அடுத்தவர்கள் மொழி எப்படி எனக்கு கொள்கை மொழியாக இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான பேரை அம்மா என்று நாம் அழைக்கலாம். ஆனால், பெற்றவள் ஒருத்தி மட்டும்தான்.

அதனால் எனக்கு கொள்கை மொழி என்னுடைய தாய்மொழி தமிழ். தெலுங்கு, கன்னடம், பிஹாரி என அவரவருக்கு அவர்களுடைய தாய்மொழி தான் கொள்கை மொழியாக இருக்க முடியும். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கையே. அதேபோல், இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை. தமிழே எங்கள் மொழி என்பது தமிழ் தேசியக் கொள்கை. திராவிடம் என்றால் என்ன? தமிழ் தேசியம் என்றால் என்ன? தவெகவைச் சேர்ந்த யார் இதற்கு விளக்கம் கூறுவார்கள்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய சீமான், “தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய், தந்தையாகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும், எங்கள் (நாதக) கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட, லட்சிய உறவு மட்டும் தான் மேலானது. எனவே, அண்ணன் – தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகை மட்டும்தான்” என ஆக்ரோஷமாக மீண்டும் பேசினார்.

இதனையடுத்து, விஜய் – திருமாவளவன் ஒரே மேடையில் ஏறி கூட்டணி அமைக்கப் போவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அண்ணன் திருமாவளவன் சிறுபிள்ளைத்தனமான செயலையெல்லாம் செய்ய மாட்டார். எனக்கு பாடம் நடத்திய வாத்தியார் அவர். அது போன்ற தவறுகளை அவர் செய்ய மாட்டார்” என பதிலளித்தார்.

Tvkvijayyy

முன்னதாக, நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் கொள்கைகள்எனக் கூறும் அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, ஒன்று சாலையின் அந்தப் பக்கமாக நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கமாக நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான். இது நடுநிலை அல்ல., கொடுநில” என காட்டமாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: ஒரே மேடையில் திருமாவளவன் – விஜய்.. கூட்டணிக்கான அஸ்திவாரமா?

மேலும், தவெக மாநாட்டிற்கு முன்பு பேசிய சீமான், என் தம்பி (விஜய்) என்னை எதிர்த்தாலும், நான் அவனை ஆதரிப்பேன் எனப் பேசியிருந்தார். இந்த நிலையில், மாநாட்டுக்குப் பிறகு சீமான் கடுமையாக விஜயை விமர்சித்து வருகிறார். இதனிடையே, தனியார் வார இதழ் நடத்தும் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக வெளிவந்த தகவல், அரசியல் பகிர்வு என்ற கோட்பாட்டு அரசியலை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!