தலைவலியாகும் தவெக மாநாடு.. என்னதான் செய்கிறார் விஜய்?

Author: Hariharasudhan
24 October 2024, 2:36 pm

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுப் பணிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

விழுப்புரம்: கடந்த பிப்ரவரியில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் கட்சி ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் கொடி மற்றும் பாடலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஜய் அறிமுகப்படுத்தினார். அப்போது, கொடிக்கான விளக்கத்தையும், தவெகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை கட்சி மாநாட்டில் கூறுவதாகவும் விஜய் தெரிவித்தார்.

இதன் பேரில், வருகிற அக்டோபர் 27ஆம் தேதி, அதாவது இன்னும் மூன்றே நாட்களில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் வந்து பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

இதனிடையே, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த வடகிழக்குப் பருவமழையால் மாநாட்டுத் திடம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால், மாநாடு நடைபெறும் நாளன்று மழை பெய்தால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. அதேநேரம், மழையின் இடையிலும் மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது, மழை பெய்ததற்கான சுவடே இல்லாமல் திடல் மாறி வருகிறது. அந்த வகையில், மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனால், மாநாட்டுத் திடலில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் மாநாட்டுத் திடலின் அனைத்து திசைகளிலும் நின்று கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், 2 நாட்களுக்கு முன்பு, பொது சாலையில் பேர்கார்ட் அமைத்து ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. அதேநேரம், இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : பிரியாணி அரிசி பையில் கட்டுகட்டாக பணம்.. போலீசில் பரபரப்பு புகார்

அதற்கு முன்னதாக, திடல் அமைந்திருக்கும் பகுதிகளில் இருக்கும் தங்கள் வயல்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து, தடுப்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகளை அகற்றினர். இவ்வாறு அடுத்தடுத்த இடையூறுகள் விஜயின் தவெகவின் மாநாட்டை சூழ்ந்துள்ளது. இதனிடையே, காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோர் இடையே விஜய் இருப்பது போன்ற பேனர் வைக்கப்பட்டு இருப்பது கவனம் பெற்றுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!