2 தொகுதிகளில் இடைத்தேர்தல்…? திணறும் திமுக…! CM ஸ்டாலினுக்கு புதிய தலைவலி!!

Author: Babu Lakshmanan
6 March 2024, 8:02 pm
Quick Share

தமிழக தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதாரணி, இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜகவுக்கு தாவினார். உடனடியாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

அவருடைய பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் அப்பாவு கடந்த மாதம் 25ம் தேதி ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டார். அன்றே இதற்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டு விளவங்கோடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில
சென்னை உயர்நீதி மன்றம் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடியை
குற்றவாளி என்று அறிவித்தது. அடுத்த இரு நாட்களில் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதால் முதலமைச்சர் ஸ்டாலின் வேறு வழி இன்றி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் செய்தார்.

மேலும் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததால் பொன்முடி வகித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பதவியும் பறிபோனது. ஆனால் விஜயதாரணி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு காட்டிய மின்னல் வேகம், பொன்முடியின் விஷயத்தில் அப்படியே மிஸ்ஸிங்.

இதனால் கடந்த டிசம்பர் மாதமே குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்துவிட்ட நிலையில் திருக்கோவிலூர் தொகுதியை ஏன்
அதிகாரப்பூர்வமாக காலியானதாக அறிவிக்கவில்லை? என்ற கிடுக்குப்பிடி கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்தது. அது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் எம்எல்ஏக்கள் தளவாய் சுந்தரம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சபாநாயகர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதற்கு சபாநாயகர் அப்பாவு தரப்பில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கிறோம். அதைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் இருந்து தீர்ப்பின் நகல் கிடைத்ததும், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் டிசம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பின் நகல் முழுமையாக தமிழக சட்டப்பேரவையின் செயலகத்திற்கு உடனடியாக அனுப்பியும் வைக்கப்பட்டது. இதையடுத்தே சட்டப்பேரவை செயலகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டது.

இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பொன்முடி வழக்கின் மீதான தீர்ப்பின் நகலை பெறுவதற்கு திமுக அரசு கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஆர்வமும்
காட்டவில்லை. திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் இது தொடர்பாக அதிமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதை உணர்ந்ததும்தான் தீர்ப்பின் நகலை சட்டப்பேரவை செயலகம் அவசர அவசரமாக கேட்டு வாங்கியுள்ளது, என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

காலியாக உள்ள எம்பி, எம்எல்ஏ தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் திருக்கோவிலூர், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாக தெரிகிறது.

இப்படி இந்த இரு தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதமோ அல்லது மே மாதமோ தேர்தல் நடத்தப்பட்டால் அது திமுக தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.

ஏனென்றால் விளவங்கோடு தொகுதியை பொறுத்தவரை 2021 தேர்தலில் விஜயதாரணிக்கு அடுத்து அதிக ஓட்டுகளை பெற்ற கட்சியாக பாஜக திகழ்கிறது. விஜயதாரணிக்கு 87 ஆயிரம் ஓட்டுகளும், பாஜக வேட்பாளர் ஆர் ஜெயசீலனுக்கு 59 ஆயிரம் ஓட்டுகளும் அப்போது கிடைத்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய அளவுக்கு வாக்கு வங்கி எதுவும் கிடையாது.தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும்தான் அங்கே செல்வாக்கு அதிகம். அதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்காக 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ததாக கூறப்படும் தொகையை விளவங்கோட்டில் வாக்காளர்களுக்காக திமுக இறக்க விரும்பாது என்பதே எதார்த்த நிலை.

தவிர நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அங்கு மத்திய துணை ராணுவ படையும் அதிக அளவில் குவிக்கப்படும். இதனால் எந்த கட்சியும் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் இல்லை என்றே கூறவேண்டும்.

மேலும் விஜயதாரணிக்கென்று இந்தத் தொகுதியில் தனி செல்வாக்கும் உண்டு. இது பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தலாம்.

திருக்கோவிலூர் தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக இரு கட்சிகளுமே சமபலத்தை கொண்டவை. இங்கு தேமுதிகவுக்கும் ஓரளவு செல்வாக்கு உண்டு. 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பொன்முடி ஒரு லட்சத்து10 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி கண்டார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கலிவரதனுக்கு 51 ஆயிரம் வாக்குகளே கிடைத்தது.

2016ல் இதே தொகுதியில் பொன்முடி 94 ஆயிரம் ஓட்டுகள் பெற்று அதிமுக வேட்பாளர் கோதண்டனை 42 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். அதற்கு முந்தைய தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் 78 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி கண்டார். திமுக வேட்பாளர் தங்கம்
69 ஆயிரம் வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.

ஆனால் தற்போது இடைத்தேர்தல் எதற்காக நடக்கிறது என்ற கேள்வி முதலில் எழுப்பப்படுவதுதான், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஏனென்றால் திமுக ஆட்சியில் இருக்கும்போதே சொத்துக் குவிப்பு வழக்கில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பொன்முடி குற்றவாளி என்று உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதுடன் மட்டுமல்லாமல் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும் திமுக வரலாற்றில் எப்போதும் நடந்திடாத ஒன்று.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தின் எல்லா தொகுதி மக்களையும் போலவே திருக்கோவிலூர் வாக்காளர் மத்தியிலும் திமுக அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது என்று கூறப்படுகிறது. இதுபோன்ற நிலையில் இத்தொகுதியில் திமுக ஒரு வேட்பாளரை நிறுத்தி பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்தாலும் அது பலன் அளிக்குமா? என்ற கேள்விதான் எழுகிறது.

மேலும் பொன்முடி அமைச்சராக இருந்தபோது பொதுவெளியில் பெண்களை துடுக்குத் தனத்துடன் கிண்டலாக பேசியது போன்ற பல்வேறு நிகழ்வுகள் தொகுதியை திமுகவுக்கு எதிராக திருப்பி விட்டு இருக்கிறது, என்கிறார்கள்.

இருந்தபோதிலும் திமுக இதை ஒரு கவுரவ பிரச்சினை ஆக எடுத்துக்கொண்டு திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பது உறுதி என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஏனென்றால் இந்த இடைத் தேர்தலில் தோல்வி கண்டால் அது 2026 தமிழகத் தேர்தலில் அதிமுக, பாஜக கட்சிகளுக்கு ஒரு வலுவான பிரச்சார ஆயுதமாக ஆகிவிடலாம்.
இது போன்ற சூழல் ஏற்படாமல் தோல்வியை தவிர்ப்பதற்காக திமுக வரிந்து கட்டிக்கொண்டு திருக்கோவிலூரில் களம் இறங்கும் என்பது நிச்சயம்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளிடம் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள திமுக பல்வேறு நெருக்கடிகளையும் சமாளித்து இந்த இரு தொகுதி இடைத்தேர்தலிலும் ஜெயிக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

Views: - 173

0

0