51 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம் : அண்ணாமலை ‘எபெக்ட்’டா?…

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 6:46 pm
Stalin Vs Annamalai - Updatenews360
Quick Share

கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவராக, அண்ணாமலை ஐபிஎஸ் பதவியேற்றுக் கொண்டது முதலே திமுக அரசு மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.

அண்ணாமலை காட்டும் அதிரடி!!

அவருக்கு முன்பாக இருந்த பாஜக தலைவர்களை விட அவர் காட்டிவரும் அதிரடி வேகத்தால் திமுக தலைமை சற்று நிலைகுலைந்து போயிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அண்ணாமலை இப்படி அதிரடி அரசியலில் இறங்குவார் என்று திமுகவோ, அதன் கூட்டணி கட்சிகளோ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

முதலில் லாக்கப் மரணங்கள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தொடர் கொலைகள் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையே கையில் எடுத்த அவர், கடந்த அண்மையில் திமுகவுக்கு பெரும் குடைச்சல் கொடுக்கும் விதமாக, இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் கூறி அதிர வைத்தார்.

அண்ணாமலையால் அதிரும் அரசு

தமிழக சுகாதாரத் துறையிலும், வீட்டு வசதி வாரியத் துறையிலும் நடந்த முறைகேடுகள் குறித்து அவர் வெளியிட்ட ஆதாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதில் திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அண்ணாமலையிடம் இருந்து உடனுக்கு உடன் பதில் வருவதுடன் அது பெரும் பேசு பொருளாகவும் மாறிப்போய் விடுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தனது கேள்வி கணைகளுக்கு ஒருமுறைக்கு இருமுறை அல்ல, பலமுறை யோசித்து, பதில் அளிக்க கூடிய நிலையை அண்ணாமலை உருவாக்கி விட்டார் என்ற பேச்சு அனைத்து மட்டத்திலும் உள்ளது.

தன்னைப்பற்றி கடுமையாக விமர்சிப்பவர்களை அவர் லேசில் விடுவதில்லை. அவர்களது பின்னணியை தோண்டி துருவி எடுத்து விளாசுகிறார். பத்தாண்டு காலம் போலீஸ் பணியில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது கைவந்த கலையாக இருக்கிறது, என்கிறார்கள்.

திமுக மீது ஊழல் புகார்

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் வாங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. குறைந்த விலைக்கு ஆவின் நிறுவனத்தில் தயாரிக்க முடிவு செய்த பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளார்கள் என்பதை சம்பந்தப்பட்ட துறையில் எந்தெந்த தேதிகளில் ஆலோசித்தார்கள். அதில் யார் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள். என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை அதிகாரிகள் நகல் ஆதாரங்களுடன் அண்ணாமலை தெரிவித்து அரசுக்கு கடும் நெருக்கடியும் கொடுத்தார்.

இந்த விவகாரத்தில் டெண்டர் இன்னும் உறுதி செய்யப் படாத நிலையில் முறைகேடு எப்படி நடந்திருக்கும்?… அதற்கு வாய்ப்பே இல்லை! என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்தார்.

ஆனால் இதில், தான் எழுப்பிய இன்னொரு கேள்விக்கு இதுவரை அமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறும் அண்ணாமலை சம்பந்தப்பட்ட அனிதா டிக்ஸ் காட் என்ற நிறுவனம் பொங்கல் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு செய்துள்ளது. அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். ஆனாலும் அந்த நிறுவனம் இதுவரை கருப்புப் பட்டியலில் வைக்கப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகும் அந்த தனியார் நிறுவனம் டெண்டரில் கலந்து கொள்ள எப்படி அனுமதிக்கப்பட்டது என்று எதிர் கேள்வியை முன் வைத்தார்.

ஆவின் ஊட்டசத்து மாவு கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறப்பட்ட நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவினில் இந்த கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பொருளை தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அது பற்றி ஆய்வு நடக்கிறது. ஆய்வு முடிந்து தயாரித்து கொடுத்தால் கொள்முதல் செய்யலாம் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஷாக்

ஒரு அரசு நிறுவனத்தால் ஊட்டச்சத்து மாவு தயார் செய்வது இயலாத காரியம் அல்ல. அதுமட்டுமல்ல இதுபற்றி விவாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவலும் இதன் மூலம் உறுதியாகிவிட்டது என்று அண்ணாமலை ரகசியத்தை உடைத்தார். இந்த விவகாரத்தில்100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறி இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அடுத்ததாக அவர் வைத்த இன்னொரு முக்கிய ஊழல் குற்றச்சாட்டு நில அங்கீகாரம் பெறுவது தொடர்பானது. ஒரு இடத்தை வாங்கி அதற்கு அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பது முதல் இடத்தை பார்வையிடுதல், சாலை அமைத்தல், அதை பார்வையிட்டு சான்றிதழ் அளித்தல் என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் எத்தனை நாள் அரசு அவகாசம் வழங்கி இருக்கிறது என்பதை அண்ணாமலை சுட்டிக்காட்டினார். இதற்கு குறைந்தபட்சம் 200 நாட்கள் ஆகும் நிலையில் ஜீ-ஸ்கொயர் நிறுவனத்துக்கு மட்டும் 8 முதல் 20 நாட்களில் பல இடங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதையும் இணையதள விண்ணப்பத்தை ஜீ-ஸ்கொயர் நிறுவனம் மட்டுமே பயன்படுத்தும் விதத்தில் சலுகை காட்டப்பட்டதையும் அதேநேரம் இதர பெரிய கட்டுமான நிறுவனங்களிடம் பாகுபாடு காட்டப்பட்டதையும் ஆதாரங்களுடன் அண்ணாமலை வெளியிட்டார்.

இதற்கு வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி சார்பில் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்ததால் அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஆகாது என்று பொத்தம் பொதுவாகத்தான் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் CMDA மற்றும் DTCP ஆகியவற்றில் அதன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து அங்கீகாரம் வாங்குவது எளிதானது அல்ல என்பதை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு திமுக ஆடிட்டர், அண்ணா நகர் திமுக எம்எல்ஏ மகன் என்பதை அவர்களது பெயர் விவரங்களுடன் வெளியிட்டு ஒவ்வொரு துறையிலும் திமுக நிர்வாகிகள் தலையிட்டு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து இதை கச்சிதமாக செய்து முடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர் சுமத்தினார்.

சவால் விட்ட அண்ணாமலை

இந்த ஊழல் குற்றச்சாட்டு பற்றி வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன் என்றும் அண்ணாமலை சவால் விட்டார். இதுபோல இன்னும் பல திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன். அடுத்து நான் கூறும் குற்றச்சாட்டு இதைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று அவர் இன்னொரு பகீர் குண்டையும் தூக்கி போட்டிருக்கிறார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இந்த அளவுக்கு துறை ரீதியாக நடக்கும் அசைவுகள், தலையீடுகள் என எல்லா விவரங்களும் அண்ணாமலையின் கைகளுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பது எப்படி?…இந்தக் கேள்வி அனைவரையும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

இது குறித்து திமுக அரசு ரகசிய விசாரணையையும், கண்காணிப்பையும் தொடங்கி
விட்டது என்று, மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

“மகாபலிபுரத்தில் தமிழக சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்ட திமுக அரசு முடிவு செய்து அதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் 6 அமைச்சர்கள் தலா 100 ஏக்கர் நிலத்தை பினாமி பெயர்களில் வாங்கி குவித்து இருக்கிறார்கள் என்ற ஒரு திடுக் தகவலை அண்ணாமலை வெளியிட்டார். இந்த விஷயம் எப்படி வெளியே கசிந்தது என்ற திமுகவினரின் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

இதனால் ஒவ்வொரு துறையிலும் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும். அரசு ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அது வெளியே கசிந்து விடாமல் விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்று அரசின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக அதிகாரிகளை தொடர்ந்து கண்காணித்து வரும்படி கேட்டுக்கொள்ளப் பட்டு இருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் பேச்சு உள்ளது. இதன் எதிரொலியாகத்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அண்மைக்காலமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவே தோன்றுகிறது.

ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். எனினும் கடந்த 6 மாதங்களாக இது மிக அதிக அளவிற்கு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம், 30 ஐபிஎஸ் அதிகாரிகளும், மார்ச் மாதம் 17 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல் கடந்த வாரம் 44 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றமும் நடந்தது.

இந்த நிலையில் தற்போது 51 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் வெவ்வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இப்படி ஒட்டு மொத்தமாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

வேறு துறையில் ராதாகிருஷ்ணன்

குறிப்பாக, சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் இருந்து வந்தார். அதிமுக ஆட்சிகாலத்தில் கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தபோது அவர் இந்த துறைக்கு மாற்றப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகும் அவர் அதே துறையில் நீடித்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென்று மாற்றப்பட்டு உள்ளார். அவர் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலாளராக கு.செந்தில்குமார் நியமிக்கப் பட்டு இருக்கிறார்.

இதுபோல பல உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசில் ஊழல் நடந்ததாக
2 துறைகள் மீது குற்றம் சாட்டியதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் கூட ஒரே வாரத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மிக அதிக அளவில் திடீரென பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.

ஏனென்றால் தனது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறிய சில தகவலைகளையும் இங்கே தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். அண்ணாமலையிடம், “நீங்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்ததால் உயர் அதிகாரிகள் சிலர் உங்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்களா?” என்று நேரடியாக கேட்க அதற்கு அவர், “நேர்மையாக பணியாற்ற ஆசைப்படும் பலர் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். அந்த நெருக்கடியை தவிர்க்க அவர்களே வெளியே சொல்லி விடுகிறார்கள்” என்று என்று செய்தியாளர்களிடம் பதில் கூறியிருந்தார்.

அமைச்சரவையில் மாற்றம்?

மேலும் அரசுத் துறை ரீதியாக நடக்கும் செயல்பாடுகள் கை மாறுவது லேசான விஷயமல்ல. அதன் பின்னணியில்தான் அரசு அதிகாரிகள் மீதான இந்த தீவிர கண்காணிப்பு என்று பேசப்படுகிறது.

கடந்த மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதன் அடுத்த கட்டமாக விரைவில் அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கலாம் என்று கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது.

இதெல்லாம் அண்ணாமலையால் வந்த வினை என்று திமுகவினரே முணுமுணுக்க தொடங்கி இருப்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம்” என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 586

0

0