தமிழக ஆவின் VS குஜராத் அமுல்..! இடியாப்ப சிக்கலில் திமுக அரசு…! பரிதவிக்கும் CM ஸ்டாலின்…?

Author: Babu Lakshmanan
26 May 2023, 9:12 pm
Quick Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அமுல் நிறுவனத்தின் எல்லை மீறிய பால் கொள்முதலை தடுத்து நிறுத்தவேண்டும், இல்லையென்றால் ஆவின் பால் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கவலை தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது.

ஏனென்றால் இது தொடர்பாக அவர் மத்திய மீன்வளம்,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அல்லது இத்துறைகளின் இணை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான எல்.முருகனுக்கு
எழுதி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் அமுல் நிறுவனத்தால் உருவாகும் போட்டியை சமாளிக்க வழி தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

ஆனால் மத்திய பாஜக அரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வகிக்கும் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினால்தான் அது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படும் என்று கருதியோ, என்னவோ அவருக்கு இந்த கடிதத்தை ஸ்டாலின் எழுதி
இருக்கலாம் என்றும் காரணம் கூறப்படுகிறது.

முதலமைச்சர் எழுதிய அந்த கடிதத்தில், “அமுல் நிறுவனம், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், ‘வெண்மை புரட்சி’ என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும். எனவே, இந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அவருடைய இந்த கடிதம், எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்பது தெரியவில்லை.
அதேநேரம் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை அதிகரித்து தராவிட்டால் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆவின் நிர்வாகத்துக்கு பலத்த சவால் ஏற்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆவின் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தினமும் 42 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதாக கூறப்பட்டது.

தற்போது இது 35 லட்சம் லிட்டராக சரிந்து போய் இருப்பது திமுக அரசு தெரிவிக்கும் தகவல் மூலமே உறுதியாகிறது. ஆனால் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினரோ, தினமும் 27 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் ஆகிறது. பற்றாக்குறையை சமாளிக்க மராட்டிய மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து பால் பவுடரையும் வெண்ணையையும் ஆவின் நிர்வாகம் வாங்கி அதை பாலில் கலந்து விற்பனை செய்து வருகிறது என்று கடந்த 6 மாதங்களாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஆவின் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது. அதன்படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு
41 ரூபாயில் இருந்து, 44 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

ஆனால் இந்தத் தொகை அப்படியே கிடைத்து விடுவதில்லை என்கிறார்கள். ஏனென்றால் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களிடம் பாலை
தரம் நிர்ணயம் செய்து வாங்குவதால் ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை குறைந்து விடுவதாக கூறப்படுகிறது.

அதேபோல மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் வாங்குவது, பராமரிப்பு செலவுகள், தாமதமான பண பட்டுவாடா போன்றவற்றால் கஷ்டப்படும் கால் நடை வளர்ப்பு விவசாயிகள் தனியார் பால் நிறுவனங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், தமிழக அரசு ஒரு லிட்டருக்கு கொடுக்கும் விலையை விட ஐந்து ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரை தனியார் பால் நிறுவனங்கள் கூடுதலாக தருகின்றன என்பதுதான்.

இது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 30 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. இதில் ஆவின் செய்யும் கொள்முதல் 35 லட்சம் லிட்டர்தான். அதாவது மாநிலத்தில் தினமும் உற்பத்தி செய்யப்படும் மொத்த பாலில்14 சதவீதத்தை மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. எஞ்சிய சதவீத 86 சதவீதப் பால் தனியார் வசம் போய் விடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியார் பால் நிறுவனங்களுக்கு
கடும் போட்டியாளராகவும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்த ஆவின் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு நிறுவனங்களை புறக்கணித்து வரும் திமுக தற்போது ஆரம்பித்திருக்கும் புதிய நாடகம்தான் தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதம். இது ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வழங்க முதலில் தனியார் நிறுவனத்திடம் இருந்து இனிப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தமிட்டிருந்த திமுகவின் இரட்டை வேடத்தை தமிழக பாஜக முற்றிலும் அம்பலப்படுத்தியதால் வேறு வழியின்றி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆவின் நிறுவனத்திடம் இருந்தே இனிப்புகள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்துவிட்டாரா?…

தினசரி பால் கொள்முதலை அதிகரித்து பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்பட செயல்படுத்துவதிலும் கவனத்தை செலுத்தாமல் வழக்கமான திசை திருப்புதல் நாடகங்களில் ஈடுபடுவதை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும்”என்று வலியுறுத்தி இருக்கிறார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் “ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு 32 முதல் 34 ரூபாய் வரை மட்டுமே விலை வழங்கப்படும் நிலையில், அமுல் நிறுவனம் லிட்டருக்கு 36 ரூபாய் வரை வழங்குகிறது. இதன் காரணமாக கொள்முதலிலும், விற்பனையிலும் ஆவின் நிறுவனம் பெரும் பங்கை இழக்க நேரிடும். எனவே அமுல் நிறுவனத்திடம் ஆவின் ஒருபோதும் வீழ்ந்து விடக் கூடாது.

தமிழகத்தின் பால் விற்பனைச் சந்தையில் ஆவின் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கொள்முதல் வீழ்ச்சியைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு பால் கொள்முதல் விலையை உயர்த்துவதுதான். எனவே, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாயும் எருமைப்பாலுக்கு 51 ரூபாயும் என்ற விலையை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

“பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்களுக்கு இணையாகவோ அல்லது அதைவிட கூடுதலாக ஒரு ரூபாயோ வழங்கினால் ஆவின் கடுமையான போட்டியை தர முடியும். இல்லையென்றால் அமுல் நிறுவனம் தமிழகத்தில் மேற்கொள்ளும் பால் கொள்முதலால் ஆவின் வீழ்ச்சியைத்தான் சந்திக்கவேண்டி இருக்கும்” என்று பால்வளத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

“குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வரும் அமுல் நிறுவனம் வேறு எந்த மாநிலத்திலும் பால் பொருட்கள் விற்பனையிலோ, பால் கொள்முதலிலோ ஈடுபடக்கூடாது என்று யாரும் கூற முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ஒரு நிறுவனம் எங்கு வேண்டுமானாலும் தனது வர்த்தகத்தை நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார் என்பது தெரியவில்லை. அண்மையில் கர்நாடக மாநில அரசின்
பால் நிறுவனமான நந்தினிக்கும், அமுலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டா போட்டி அரசியல் ரீதியான மோதலிலும் முடிந்தது.

அதுபோன்று தமிழகத்திலும் நடந்து விடக்கூடாது என்று கருதிக் கூட அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் அமுல் நிறுவனத்தால் உருவாகியிருக்கும் போட்டியை ஆவின் நிறுவனம் நேரடியாக சந்தித்து வெற்றி காண்பதுதான் அதன் எதிர்காலத்திற்கு நல்லது. அப்போதுதான் ஆவின் புத்துணர்ச்சியும், புதுப்பொலிவும் பெறும்.

இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகும் போது குஜராத் மாநில அரசுக்கு அந்தப் பணம் போய்ச் சேருகிறது. ஆனால் அதே நிறுவனம் தமிழகத்தில் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்யும்போது அந்தப் பணம் கால்நடை பண்ணை வைத்திருப்போருக்கும், விவசாயிகளுக்கும்தான் வந்து சேருகிறது. இப்படி நமது மாநிலத்திற்கு வரும் ஒரு நிறுவனத்தின் பணத்தை நாம் ஏன் மறுக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதியின்படி ஒரு லிட்டர் பால் விலை மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதனால் ஆண்டுக்கு 272 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அப்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாயோ அல்லது நான்கு ரூபாயோ அதிகரித்துக் கொடுத்தால் அதன் காரணமாக பாலின் விற்பனை விலையை உயர்த்தவேண்டிய இடியாப்ப சிக்கல் உருவாகலாம். இதனால் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்றும் திமுக நினைக்கலாம். இருந்தபோதிலும் பால் கொள்முதல் விலையை குறைந்தபட்சம் மூன்று ரூபாய் அதிகரித்துக் கொடுத்தால் அரசுக்கு ஏற்படும் ஆண்டு இழப்பு 700 அல்லது 800 கோடி ரூபாயாக அதிகரிக்க கூடும்.

இது ஒரு பெரிய நஷ்டமே அல்ல. ஏனென்றால் அரசு மாநகர சாதாரண பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்வதற்கு 2500 கோடி ரூபாயை இந்த ஆண்டு திமுக அரசு ஒதுக்கியுள்ளது. எனவே ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காகவும், தங்களுக்கு சவால் விடும் போட்டியாளர்களை வீழ்த்துவதற்காகவும் தமிழக அரசு
எந்த ரிஸ்க்கையும் எடுக்கலாம்” என்று அந்த பால்வளத் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Views: - 52

0

0

Leave a Reply