ஆங்கிலம், இந்தியில் பிளந்து கட்டிய அதிமுக வேட்பாளர்… நாடாளுமன்றத்தில் ஒரு கை பார்ப்பேன் என சபதம்… ஆர்ப்பரித்த தொண்டர்கள்…!!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 11:57 am

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்து நாடாளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சி சார்பில் செயல் வீரர் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தற்போதைய தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து செய்யப்படும், சிலிண்டர் விலை 500 ரூபாய் குறைக்கப்படும், பெட்ரோல் டீசல் விலை 25 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதியின் பெட்ரோலுக்கு நான்கு ரூபாயும், டீசலுக்கு மூன்று ரூபாயும் குறைப்பதற்கு தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா…? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து என கடந்த தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் காப்பி அடித்து வைத்துள்ளனர், எனக் கூறினார்.

அதிமுக சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்கவேலு பேசுகையில், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரச்சினை தீர்ப்பதற்காக குரல் கொடுப்பேன். தமிழ், ஆங்கிலத்தில் பேசுவேன். அறிஞர் அண்ணாவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழ் முக்கியம் எனக் கூறினர். அவர்கள் வார்த்தைகளை பின்பற்றி வழி நடப்பேன். நாடாளுமன்றத்தில் ஹிந்தியில் கேள்வி கேட்டாலும், ஹிந்தியில் பேசுவேன் என பேசி காட்டினார்.

அதிமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 66 வயதில் குடும்பத்திற்காக உழைத்தேன். இனிமேல் கரூர் மக்களுக்காகவும் ,அதிமுக கட்சிக்காகவும் உழைப்பேன். உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவிற்கு, என கூறினார்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…