அதிமுகவில் இருந்தே ஓபிஎஸ் நீக்கமா..? இடைக்கால பொதுச்செயலாளராகும் இபிஎஸ்..? ஓபிஎஸ் வகித்து வரும் பொருளாளர் பதவியை தட்டி தூக்கிய சீனியர் தலைவர்..!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 10:46 am
Quick Share

சென்னை : சென்னையில் நடந்து வரும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் காண்பித்தனர்.

Admk OPS EPS- Updatenews360

பொதுக்குழுவில் ஓபிஎஸ் முன்மொழிந்த அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று இபிஎஸ் தரப்பில் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். மேலும், அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு, அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் அங்கிருந்து வெளியேறி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், உடனடியாக இரவோடு இரவாக டெல்லிக்கு புறப்பட்டு சென்று பாஜக தலைவர்கள் சந்தித்து பேசினார். அவர்கள் அளித்த சில தன்னம்பிக்கையால் மீண்டும் நேற்று முன்தினம் சென்னை திரும்பியவுடன், சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இதனிடையே, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் 75 தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கவும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யவும் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

EPS - Updatenews360

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியை துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமிக்கு வழங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தின் அடிப்படையில்தான், 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இன்று நடக்கும் அதிமுக நிர்வாகிகளின் கூட்டம் செல்லாது என்று அறிவித்த ஓபிஎஸ், அவசர அவசரமாக தேனியில் இருந்து சென்னை வந்து கொண்டிருக்கிறார்.

Views: - 318

0

0