அன்று Gobackmodi… இன்று Welcomemodi-யா…? நீதிமன்ற தீர்ப்பைக் கூட காப்பாற்றத் தவறிய திமுக ; இபிஎஸ் அட்டாக்…!!

Author: Babu Lakshmanan
24 February 2024, 1:02 pm

அதிமுக கூட்டணி பற்றி சிலர் விஷமப்பிரச்சாரம் செய்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சரும், முன்னள் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் நிறுவனருமான எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, கட்சியின் கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமி, ‘தமிழர் உரிமையை மீட்போம்… தமிழ்நாட்டை காப்போம்’ எனும் நாடாளுமன்ற தேர்தல் இலட்சினையை வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :-
திமுக எம்.பிக்கள் தமிழ்நாடு மக்களின் பிரச்னைக்களுக்காக குரல் கொடுக்கவில்லை; நீட் தேர்வை திமுக அரசு இன்னும் ரத்து செய்யவில்லை. காவிரி நதி நீர் பிரச்னை வந்த போது தமிழ்நாடு மக்களுக்காக அதிமுக அரசு நல்ல தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது; அந்த தீர்ப்பை கூட திமுக காப்பாற்றவில்லை.

அதிமுக எம்.பிக்கள் இரு அவைகளிலும் அழுத்தம் கொடுத்து ஒத்தி வைக்கும் அளவுக்கு போராடியவர்கள். அந்த அழுத்தம் காரணமாகவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இல்லாதபோது Go Back Modi என்பார்கள்;
கேலோ விளையாட்டு போட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது Welcome Modi என்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதிமுக கூட்டணி பற்றி சிலர் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வென்று தமிழகத்தின் குரலை நாடாளுமன்றததில் ஒலிக்கச் செய்வார்கள், எனக் கூறினார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் AI தொழில்நுட்ப முறையில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?