ஓபிஎஸ் தரப்பினர் ஒரு வெங்காயம் மாதிரி… அவங்க கிட்ட நாலு ஆணியும், ஒரு கோணியும் தான் இருக்கு : ஜெயக்குமார் கலகல பேச்சு!!

Author: Babu Lakshmanan
2 January 2023, 5:59 pm
Quick Share

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் ;- ஒரு பக்கம் வருத்தமும், வேதனையும் ஒரு பக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் ஏறி வந்த ஏணி அதிமுக. பாமகவை ஏற்றி விட்டது ஜெயலலிதா, அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியை வெளியே தெரிந்திருக்காது. ஜெயலலிதா கூட்டணி வைத்த உடனே தான் பாமகவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது.

அதற்கு முன்பு பாமகவிற்கு அங்கீகாரமே கிடையாது. 1991 ஆம் ஆண்டு பாமக சட்டமன்றத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும். 1998ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகு தான், 5 சீட்டு கொடுத்த உடனே நான்கு இடத்தில் வருகிறார்கள். நான்கு இடத்தில் ஜெயித்ததால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள். 2001ஆம் ஆண்டு 27 இடங்களில் அதிமுக சார்பில் பாமகவிற்கு சீட்டு கொடுக்கப்பட்டது. அதில் 20 இடங்களில் பாமக வெற்றி பெற்றது. அதிமுக தயவால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள். எம்பியாக ஆனீர்கள்.

பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால், அதிமுக சிறுமை ஆகி விடுமா?. அதிமுக தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அன்புமணி ராமதாஸின் கருத்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு தான் அவரின் கூற்று உள்ளது. இது போன்ற கருத்துக்களை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அவர் செய்ய வேண்டாம். அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அவர் ஒன்னு சொன்னால் அதிமுக சார்பில் 100 சொல்லப்படும்,என்று ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் : திமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள். இடைக்கால ஆசிரியர்கள் போராடுகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தையும் செய்து தருகிறேன் என முதல்வர் கூறினார். ஆனால் இடைக்கால ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். அதற்காக அமைக்கப்பட்ட குழு கண்துடைப்பு குழு.

குழு குறித்து துரைமுருகனிடம் கேட்டு பாருங்கள், குழு குறித்து அவர் அழகாக சொல்லுவார். சட்டமன்ற குறிப்பிலே உள்ளது குழு என்றாலே சுற்ற விடுவது என்று கூறுவார். அவர் கூறுவதைப் போல சுற்றவிடும் வேலையை தான் திமுக செய்துள்ளது. நத்தை வேகத்தில் திமுக அரசு நடந்து வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டு ஒப்பந்த ஊழியர்கள் போராடி வருகிறார்கள். அரசு வேலைகள் நிரப்பப்படவில்லை, என தெரிவித்தார்.

இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அவர் பேசியதாவது :- எங்களிடம் தான் பட்டா உள்ளது, சிட்டாவும் எங்களிடம் தான் உள்ளது. தேர்தல் ஆணையம் லெட்டர் எப்படி பொருந்தும். எதிரணி என்று சொன்னால் கூட 20, 30 பேர் வேண்டும். ஓபிஎஸ் பக்கம் மூன்று, நான்கு பேர் தான் உள்ளனர்.

நாலு ஆணி ஒரு கோனி வைத்துள்ளவர்கள் தான் ஓபிஎஸ் தரப்பினர். அவர்களிடம் பட்டா சிட்டா உள்ளிட்ட எதுவுமே கிடையாது. கொடி எங்களிடம் தான் உள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. போலி லெட்டர் பேட் வைத்துக் கொண்டு போலி அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். இல்லாத ஒரு பதவிக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

போலியான அரசியலை செய்து வருவது தான் ஓபிஎஸின் வாடிக்கையாக உள்ளது. அவர்களிடம் தொண்டர்கள் ஆதரவு கிடையாது. ஓபிஎஸ் குழுவினர் ஒரு வெங்காயம் வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது, அதுதான் அவர்கள், எனக் கூறினார்.

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது அநாகரிகமான செயல். இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி அதை யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தர வேண்டும். திமுக ஆட்சி தமிழக மக்களுக்கு புளித்து போய்விட்டது. தமிழக மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எப்போதுடா இந்த அரசு தொலையும் என்ற எண்ணத்தில் உள்ளனர், எனக் கூறினார்.

Views: - 161

0

0