பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் அதிமுக… இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு : கர்நாடக தேர்தலில் பரபர!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 11:29 am
EPS Karnataka- Updatenews360
Quick Share

கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவின் முரளி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி தொடருகிறது என்பதுதான் பாஜக, அதிமுக தலைவர்களின் கருத்து.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக- அதிமுக கூட்டணி தொடருகிறது என கூறியிருந்தார். இதனை அதிமுக தலைவர்களும் ஆமோதித்து இருந்தனர்.

ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை விமர்சித்து வந்தார். அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் ஊழல்களை வெளியிடுவோம் என கூறியிருந்தார்.

இதற்கு அதிமுக பதிலடி தந்தது. அதேநேரத்தில் அண்ணாமலையின் ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி போன்ற பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர் என்றும் பார்க்காமல் எடப்பாடி பழனிசாமியை இழிவாக விமர்சித்திருந்தனர்.

அதேநேரத்தில் கர்நாடகா தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதற்கான முயற்சிகளையும் அதிமுக மேற்கொண்டு வந்தது. ஆனால் பாஜக மேலிடமோ, அதிமுகவுக்கு எந்த வித சிக்னலும் தராமல் இருந்து வந்தது. இப்படியான அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிமுக தலைமையை ரொம்பவே கொந்தளிக்க வைத்தது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது திடீரென பாஜகவை எதிர்த்து கர்நாடக தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவரான அன்பரசனையே வேட்பாளராகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக மீதான கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.

Views: - 256

0

0