‘திமுகவோட கூட்டணி வச்சது தப்பு’… அதிர்ந்து போன முதலமைச்சர் ஸ்டாலின்… ஓட்டம் பிடிக்கும் கூட்டணி கட்சி எம்பி..!!

Author: Babu Lakshmanan
13 September 2022, 7:25 pm
Quick Share

கூட்டணி

2019 நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட ஈரோடு கணேசமூர்த்தி, விழுப்புரம் ரவிக்குமார், நாமக்கல் சின்ராஜ், பெரம்பலூர் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு.

இந்த நான்கு பேருமே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். அதனால் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களாகத்தான் கருதப்படுகிறார்கள்.

மதிமுகவின் கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ் மூவரும் திமுகவின் நிலைப்பாட்டை அப்படியே பின்பற்றி வருகிறார்கள். மறந்தும்கூட மாற்றுக் கருத்தை தெரிவிப்பதில்லை. மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ திமுகவுடன் ஐக்கியமாகி விட்டதால் கணேசமூர்த்தி எம்பி திமுக பற்றி எப்போதும் வாய் திறப்பது கிடையாது.

பாரிவேந்தர் விலகல்

அதேநேரம் SRM பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான பாரிவேந்தர் எம்பி மட்டும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக திமுக தலைமைக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் இருந்து விலகி, அவருடைய கட்சி நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து 40 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட அது வெற்றி பெறவில்லை.

பாரிவேந்தருக்கு எப்போதுமே பிரதமர் மோடி மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உண்டு. அதை அவ்வப்போது அவர் வெளிக்காட்டவும் தவறுவதில்லை.

காலம் வரும்

சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் செய்தியாளர்களிடம் பாரிவேந்தர் கூறுகையில், “நாட்டு பற்று கொண்டவர்களாக காந்திஜி உள்ளிட்டோர் திகழ்ந்தனர். இப்போது பிரதமர் மோடி அது போல் இருக்கிறார். நாட்டின் வளர்ச்சிக்காக அவர் இரவு பகலாக தூங்காமல் உழைத்து வருகிறார். இந்தியாவை தலைநிமிர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துவரும் மோடி சிறுபான்மையினருக்கு எதிரி அல்ல. தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சிறுபான்மையினர் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஆனால், தமிழகத்தில் இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி, பிரதமர் மோடியை சிறுபான்மையினருக்கு எதிரிபோல கட்டமைத்துள்ளனர். அந்த கட்டமைப்பு நீண்ட காலம் நிலைக்காது. இதே தமிழகம் பிரதமர் மோடியை நேசிக்கும், பாராட்டும் காலம் வரும்” என்று குறிப்பிட்டார்.

Modi - Updatenews360

மேலும் அவர் பேசும்போது “எந்தவொரு போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள அடிப்படைக் கல்வி வலுவாக இருக்கவேண்டும். ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் கல்வி மாறுபட்டால், போட்டித் தேர்வு எழுதும்போது மாணவர்கள் கோட்டை விட்டு விடுவார்கள். அதைத்தான் நீட் தேர்வில் நாம் சந்தித்து வருகிறோம். எந்தவொரு கொள்கையாக இருந்தாலும், அது மாணவர்களின் எதிர்காலத்துக்கு வலிமை சேர்ப்பதாக, பயனுள்ளதாக இருக்கும் என்றால், அது சற்று கடினமாக இருந்தாலும் ஏற்க வேண்டும். மேலும் போட்டித் தேர்வு மட்டுமே சமூக நீதியைப் பாதுகாக்கும்” என்று கூறி
பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

திமுகவுடன் கூட்டணி – வேதனை

ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் வேந்தரே பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், நீட் தேர்வு அவசியம் என்றும் பேசியதால் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் திமுக தலைமையை வலியுறுத்தின.
அப்படிச் செய்தால் அது பாரிவேந்தருக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று கருதும் திமுக தலைமை இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் அதே திருச்சி நகரில் மிக அண்மையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பாரிவேந்தர், 2019 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தது பற்றி தனது மனக்குமுறலை கொட்டி தீர்த்தார்.

“வளர்ந்த கட்சிகள் கல்யாண மேடைகளில் அரசியல் பேசுகிறார்கள். இப்படித்தான் ஆட்சியை பிடிக்கிறார்கள். சாதி இல்லை என்று சொல்வார்கள். ஆனால் தொகுதியில் இருக்கும் சாதி பெரும்பான்மையை பார்த்துதான் அவர்கள் ஆட்களை நிற்க வைப்பார்கள். அப்படித்தான் இவர்கள் ஆட்சியையும் கைப்பற்றி விடுகிறார்கள்.

நான் 2014-ல் பாஜக கூட்டணியில் இருந்தேன். அப்போது பெரம்பலூர் தொகுதியில் 2.40 லட்சம் வாக்குகள் பெற்றேன். அதன்பின் வேறு கூட்டணிக்கு சென்றேன். அந்த கூட்டணியில் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றேன்.

எம்பி பதவி என்பது சிறு அடையாளம்தான். என் அடையாளத்தின் சிறு துளிதான் அது. அதற்காக நான் போகக் கூடாத இடத்திற்கு சென்று இருக்க வேண்டியதில்லை. அது தவறு. திமுக கூட்டணியில் சேராமல் நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட வென்று இருப்பேன். தனித்து நின்று இருந்தால் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து இருப்பேன். இப்போது தனியாக நிற்காமல் விட்டு விட்டோமே என்று ஒவ்வொரு நாளும் வேதனைப் படுகிறேன். இப்படி அவசரப்பட்டு விட்டேனே என்று ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன்” என்று பாரிவேந்தர் பேசியுள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த கட்சி விழாவில் குடும்ப ஆட்சி பற்றியும் திமுக குறித்தும் மறைமுகமாக அவர் சாடியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளிப்படையாகவே திமுக கூட்டணிக்கு சென்றதை தவறு என்று கூறியிருப்பது அரசியல் களத்தில் பேசுபெருளாக மாறி இருக்கிறது.

 பாஜகவுடன் கைகோர்க்க விருப்பம்

“முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாரிவேந்தர் துணிச்சலாகத்தான் பேசியிருக்கிறார். இது திமுக தலைமைக்கு, குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்பது நிச்சயம்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“நாடாளுமன்ற எம்பி ஆகவும் பாரிவேந்தர் இருப்பதால் அவர் டெல்லியில் பாஜக தலைவர்களை அடிக்கடி சந்திப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 தமிழக தேர்தல் இரண்டிலும் அவர் பாஜகவுடன்தான் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

2019 தேர்தலில் அவர் பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இருந்தால் கூட பெரம்பலூர் தொகுதியில் உள்ள சொந்த செல்வாக்கு காரணமாக அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.

2021 சட்டப்பேரவை தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடாமல், அதிமுக, பாஜக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கும். அதனால்தான், பழைய நண்பனே நமக்குப் போதும் என்று நினைத்து பாஜகவுடன் கைகோர்க்க பாரிவேந்தர் விரும்புகிறார்.

அதேநேரம் எம்பி பதவியிலிருந்து அவர், தானாக ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை. அப்படிச் செய்தால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வந்துவிடும். மாநிலத்தில் திமுக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் அங்கு போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவது பாரிவேந்தருக்கு கடினமான காரியமாகவும் இருக்கும்.

அதேநேரம் திமுக தலைமை கோபம் அடைந்து அவரை வெளியேற்றும்போது, எம்பி பதவி பறிபோகாது. அதன் பிறகு பாஜகவில் இணைந்து விடலாமென்று நினைத்து பாரிவேந்தர் இப்படி திமுகவை கடுமையாக போட்டுத் தாக்கி இருக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கு திமுக எப்படி எதிர்வினையாற்றப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எந்த கோணத்தில் பார்த்தாலும், திமுக கூட்டணியில் எம்பியாக இருந்துகொண்டே திமுகவை பாரிவேந்தர் விமர்சித்து இருப்பது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது உறுதி” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.

Views: - 425

0

0