அடர்ந்த காட்டுக்குள் சங்கிலியால் கட்டப்பட்ட அமெரிக்க பெண் : தமிழ் முகவரியுடன் ஆதார்.. மர்மத்தை கிளப்பிய மகாராஷ்டிரா!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 6:17 pm

மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் சோனூர்லி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப் பகுதிக்குள் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார்.

அப்போது, யாரோ ஒரு பெண் அழுவது போன்ற சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது ஒரு பெண் இரும்புச் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பார்ப்பதற்கு மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட பெண் அழுதுகொண்டே இருந்துள்ளார். இதுகுறித்து, அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அப்பெண்ணை மீட்டு சவந்த்வாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவரை கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பெண் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டதாகவும், மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், மீட்கப்பட்டுள்ள பெண்ணிடம் இருந்து தமிழக முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை, அமெரிக்க பாஸ்போர்ட் நகல் மற்றும் விசா ஆகியவை கிடைத்துள்ளன.

அதனடிப்படையில், அவரது பெயர் லலிதா கயி என்பது தெரியவந்துள்ளது. அவரது அமெரிக்க விசா காலாவதியாகிவிட்டது. அவரது குடியுரிமை தொடர்பான விவரங்களை கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் அறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாட்டுப் பதிவு அலுவலகங்களுடனும் போலீஸார் தொடர்பு கொண்டு வருகின்றனர். இப்பெண் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்துள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணின் உடல்நிலை வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை. கடந்த இரு நாட்களுக்கு மேலாக அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார்.

வனப் பகுதியில் பெய்த கன மழை பெய்ததால் அந்தப் பெண் மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். மரத்தில் எவ்வளவு நாட்கள் கட்டி வைக்கப்பட்டிருந்துள்ளார் என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பெண்ணின் கணவர், தனது மனைவியை மரத்தில் கட்டிவைத்துவிட்டு தப்பியோடி இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

கிடைத்த ஆவணங்களின் அடிப்படைடியில் பெண்ணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க எங்கள் குழுவினர் தமிழகம், கோவா போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!