CM ஸ்டாலின் கேள்விகளுக்கு இறங்கி அடித்த அமித்ஷா : 2024 தேர்தல் ஆட்டம் ஆரம்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 5:02 pm
Amitshah CM - Updatenews360
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அதிரடி ஆட்டம் தமிழகத்தில் இப்போதே தொடங்கி விட்டது. அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இரண்டு நாள் தமிழக பயணம் உறுதி செய்தும் இருக்கிறது.

அமித்ஷாவுக்கு சவால் விட்ட முதலமைச்சர்

ஏனென்றால் சேலத்தில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அமித்ஷாவுக்கு சவால் விடுத்து மத்திய பாஜக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அவர் பேசுகையில்,”மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக மெட்ரோ ரெயில் முதல்கட்ட பணி, சேது சமுத்திர கால்வாய் திட்டம், 1,553 ரூபாய் கோடியில் சேலம் உருக்காலை, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை மதுரவாயல் இடையே பறக்கும் சாலை திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றியது, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம்.

ஆனால் மத்தியில் ஆளுகிற பாஜக. அரசு தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது? தமிழ்நாட்டில் பங்கேற்கும் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் சொல்ல முடியுமா? அவர்கள் கொண்டு வந்தது என்ன? இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, மாநில உரிமை பறிப்பு, மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை கூட தரவில்லை. இதுதான் அவர்கள் தமிழ்நாட்டுக்கு செய்தது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். அவர் அறிவித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு மனம் இல்லை. எனவே, தமிழகத்திற்கு வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த
9 ஆண்டுகளில் என்ன திட்டங்கள் செய்தார்கள்? என்று சொல்ல முடியுமா? இதை தமிழ்நாட்டு மக்களில் ஒருவனாகவும், முதலமைச்சராகவும் இருந்து கேட்கிறேன். இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்” என்று கடுமையாக தாக்கி இருந்தார்.

துல்லியமாக கணித்த அமித்ஷா

ஒரு மாநிலத்தின் அரசியலை துல்லியமாக கணிக்கக் கூடிய சாதுர்யம், திறமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எப்போதுமே உண்டு.

அதுவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு செல்லும்போது அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு என்னென்ன நலத்திட்டங்களை அறிவித்தது?… அவை எந்த அளவிற்கு செயல்பாட்டிற்கு வந்ததுள்ளது?… என்பது போன்ற புள்ளி விவரங்களை அமித்ஷா பட்டியலிட்டு பேசக் கூடியவர். அதனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தக்க பதிலடி கொடுப்பார் என்று பாஜகவினர் உறுதியாக நம்பினர்.

அதிர வைத்த அமித்ஷா

அந்த எதிர்பார்ப்பு சரிதான் என்பது போல வேலூரில் நடந்த பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது அதிரடியும் காட்டினார்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில் செய்ததை விட பல மடங்கு நிதியை தமிழகத்தின் வளர்ச்சிக்காக கூடுதலாகவே ஒதுக்கி இருக்கிறோம் என்பதை நறுக்குத் தெறிந்தாற்போல் அவர் குறிப்பிட்டார்.

அமித்ஷா பேசும்போது, “தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என ஸ்டாலின் பட்டியல் போட முடியுமா என கேட்கிறார். அவருக்கு நான் சொல்கிறேன். தைரியம் இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்.

  • திமுக, அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போது, 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 95 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால், 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் 2.47 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
  • காங். கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு மானியமாக 52 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், மோடி ஆட்சியில் 2.31 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
  • கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 2,352 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நெஞ்டுசாலை திட்டங்களுக்கு 58 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. மேலும்
    3719 கி.மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டும் வருகிறது.
  • 50 ஆயிரம் கோடி ரூபாயில் சென்னை- பெங்களூரு விரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
  • சென்னை எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் கட்டமைப்பு பணி 3,500 கோடி ரூபாயில் நடந்து வருகிறது.
  • என்எல்சி.யில் ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • 56 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும், பாஜக அரசால் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
  • ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 84 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

*ஏழை எளிய மக்களுக்காக 62 லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டு இருக்கிறது.

  • ஆயுஷ்மான் திட்டத்தில் 2.5 கோடி தமிழக மக்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யப்பட்டு உள்ளது.
  • செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கு சென்னை தரமணியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டு உள்ளது.
  • 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிக்கவும் தொடங்கி விட்டனர்.
  • கோவையில் புதிய இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி திறக்கப்பட உள்ளது.
  • தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் பல தொழில்கள் வர உள்ளன.
  • மதுரை எய்ம்ஸில் முதல்கட்டமாக மாணவர்கள் படிக்க துவங்கியும் விட்டனர்.

18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் திமுக இருந்தும், தமிழகத்திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கூட கொண்டு வராதது ஏன்? இதற்கான எண்ணம் உங்களுக்கு கொஞ்சம் கூட வரவில்லையே, ஏன்?”என நச்சென்று ஹைலைட்டாக ஒரு கேள்வியை அமித்ஷா எழுப்பி திமுக அரசுக்கு அதிர்ச்சியும் அளித்தார்.

சேது சமுத்திர திட்டம்

“முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த சில திட்டங்கள் குறைபாடு கொண்டவை. அதை ஏன் அவர் பெருமையோடு கூறுகிறார் என்பதுதான் புரியவில்லை”என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“முதலமைச்சர் கூறுவதுபோல கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தது மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு என்பது உண்மைதான். ஆனால் அந்தத் திட்டத்தில் எந்த பலனும் இல்லை என்பது கடல்சார் அறிவியல் அறிஞர்களின் வாதம்.

2005ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டபோது மூன்றாண்டுகளுக்குள் அது கட்டி முடிக்கப்படும் என்று அறிக்கப்பட்டது. ஆனால் நடுக்கடலில் மணலை அள்ளி ஒரு பக்கம் கொட்டியபோது இன்னொரு பக்கத்தில் இருந்து மணல் அள்ளிய இடத்திற்கே மீண்டும் வந்து குவிந்துகொண்டே இருந்தது.

இதனால் இயற்கைக்கு எதிராக உள்ள இத்திட்டம் சாத்தியமற்றது என்பதை உணர்ந்துதான் இது 2007-ல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மூன்றே ஆண்டுகளில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகை 4700 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதுதான்.

ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் கடலில் மணலை அள்ளி வேறொரு இடத்தில் கொட்டுவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த நிறுவனம் மட்டும் பல நூறு கோடி ரூபாய்களை விழுங்கி ஏப்பம் விட்டதுதான் மிச்சம். அந்த ஒப்பந்த நிறுவனம் திமுக எம்பி மகன்களில் ஒருவருக்கு சொந்தமானது என்றும் அப்போது பரபரப்பு பேச்சு அடிபட்டது.

இத்திட்டத்தை நிறைவேற்றுவது மிக மிகக் கடினம். ஒருவேளை நிறைவேற்றப்பட்டாலும் கூட அதை பராமரிக்கும் செலவு ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஆகலாம். எனவே கடலில் கரைத்த பெருங்காயம் கதையாகத்தான் சேது சமுத்திர கால்வாய் திட்டம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனால்தான் 2012ம் ஆண்டில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் கைவிடப்படும் நிலையே உருவானது.

நீட் தேர்வு ரத்து

இன்னொரு பக்கம் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் கவலையோடு கூறுகிறார். அதிக மதிப்பெண்கள் பெறும் அரசு பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு தகர்க்கப்படுவதாகவும் சொல்கிறார்.

ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத பத்தாண்டு காலத்தில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 300 பேருக்குத்தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைத்தது. அதேநேரம் தனியார் பள்ளிகளில் படித்த முப்பதாயிரம் பேர் இதே காலகட்டத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்து விட்டனர்.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி சேரும் நிலைதான் உருவானது. இப்படி வேதனையோடு சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவித்தவர், வேறு யாரும் அல்ல. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மனைவி நளினிதான்.

எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதன் பலன் தனியார் பள்ளி மாணவர்களுக்கே அதிகம் கிடைக்கும். அதேநேரம் தமிழகத்தில் உள்ள 36 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்களது பிள்ளைகள் டாக்டராக வேண்டும் என்று கனவு காணும் பெற்றோரிடம் மறைமுகமாக 60 முதல் 70 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கும் நிலையையும் ஏற்படுத்தி விடும் என்பதே எதார்த்தமான உண்மை. இந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல திமுகவினருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நிலையில்தான் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நீட் தேர்வை ரத்து
செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியிறுத்தி வருகின்றன.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உலக அளவில் பரப்பி வருகிறார் என்ற தகவல்களோடு அமித்ஷா குறிப்பிடாமல் விட்ட சில விஷயங்ககளும் உண்டு. திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிதான் தமிழர்களின் பாரம்பரியமிக்க, கலாச்சார தொடர்புடைய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு 2017-ல் தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை ஏற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த அனுமதித்தது.

மேலும் மோடி அரசு ஜல்லிக்கட்டு தடையின்றி நடத்தப்படவேண்டும் என்பதற்கான வலுவான வாதங்களை முன் வைத்ததால்தான் சுப்ரீம் கோர்ட் அண்மையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

ஒலிம்பியாட் போட்டி : திமுக ஸ்டிக்கர்

இந்தியாவில் முதன்முதலாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தும் வாய்ப்பு மோடி அரசுக்கு கிடைத்தபோது, அதை மனம் உவந்து அவர் தமிழகத்தில் நடத்திக்கொள்ள அனுமதியும் வழங்கினார். உலக அளவிலான ஒரு விளையாட்டு போட்டி நடக்கிறது என்றால் அது எந்த மாநிலத்தில் நடந்தாலும் அது தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் படமும் இடம்பெற வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நடந்தபோது முதலில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் மட்டுமே அரசு விளம்பரங்களில் இடம் பிடித்திருந்தது. அனைத்து தரப்பினரும் இந்த தவறை சுட்டிக் காட்டிய பின்புதான் பிரதமர் மோடியின் புகைப்படத்தை இடம் பெறவே செய்தார்கள்.

இப்படி ஒரு உலகளாவிய விளையாட்டுப் போட்டியில் கூட தங்களால்தான் இது நடந்தது என்பதுபோல திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ அமித்ஷாவின் வருகையால் தமிழகத்தில் 2024 தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டதென்னவோ உண்மை!

Views: - 299

0

0