தயிருக்கு 5% வரிக்கு 20% விலை உயர்வா..? நெய்-க்கு வரியே உயர்த்தல.. அப்பறம் எதுக்கு விலை உயர்வு : தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 2:10 pm
Quick Share

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஆவினில் விற்கப்படும் தயிர் மற்றும் நெய்யின் விலையை தமிழக உயர்த்தி இன்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும், மத்திய அரசு விதித்த ஜிஎஸ்டி வரியினால்தான் இந்த விலை உயர்வு என்று விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியமைந்த பிறகு 2 முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன், விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது!

கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்பின் 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் ஒரு விலை உயர்வை தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது

தயிருக்கு 5% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 5% மட்டும் வரி விதிக்கப்பட்ட நிலையில், 20% விலையை உயர்த்துவதும், நெய் மீதான வரி உயர்த்தப்படாத நிலையில் அதன் விலையையும் அரசு உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம்?

குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், அதே போல் ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்தக்கூடாது. விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்!, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 537

0

0