தமிழ் மீது பற்று இருப்பதாக நாடகம் … வீண் விளம்பரத்தை விட்டுவிட்டு செயலில் காட்டுங்க : திமுகவுக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
25 May 2023, 1:26 pm

அண்ணா பல்கலை., உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளில் 10க்கும் குறைவான மாணவர் சேர்க்கை இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மாணவர்களிடையே தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, இது போன்ற அறிவிப்புகள் தாய்மொழிக் கல்வியை நீர்த்துப் போகச் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அண்ணா பல்கலைக் கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் இருந்ததை, இந்த ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, நாடு முழுவதும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது. மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்து, அதற்கான தொடர் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசோ, தாய்மொழி குறித்து சிறிதும் சிந்திக்காமல், தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாணவர்களிடையே தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, இது போன்ற அறிவிப்புகள் தாய்மொழிக் கல்வியை நீர்த்துப் போகச் செய்கிறது.

தமிழ் மொழிப் பொறியியல் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி, ஒரு மாணவர் கூட தமிழ் வழிக் கல்வி பொறியியல் பிரிவில் சேரவில்லை என்ற மழுப்பலான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் செய்யத் தவறியது திமுக அரசின் குற்றம். செய்யாத சாதனைகளுக்காக வீண் விளம்பரங்கள் செய்வதை நிறுத்தி விட்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!