கிஷோர் கே சுவாமியை கைது செய்த போலீசார்.. திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கைது செய்யாதது ஏன்..? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!!
Author: Babu Lakshmanan21 November 2022, 1:42 pm
சென்னை : தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி, கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கிஷோர் கே சுவாமியின் கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மழையால் சென்னை பாதிக்கப்பட்ட போது தமிழக அரசு மேற்கொண்ட வெள்ள மீட்பு பணிகள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கை குறித்து சமூகவலைதளங்களில் யூடியூபர் கிஷோர் கே சுவாமி விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸின் சைபர் கிரைம் பிரிவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு கிஷோர் கே சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 4 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சுவாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் தங்கியிருந்த கிஷோர் கே சுவாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கிஷோர் கே சுவாமி கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த திமுக அரசு, தமிழக பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்?
கிஷோர் கே சாமி அவர்களின் தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழக பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
1
0