நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி? ஒரே தொகுதிக்கு குறி… மோதும் இரு தலைகள்?!!!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2023, 12:11 pm
நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி? ஒரே தொகுதியை குறி வைத்தால் மோதும் இரு தலைகள்?!!!
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் – திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது.
இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 5-10 தொகுதிகளில் பாஜக இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தயவில் பாஜக 4 இடங்களை வென்றது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தேர்தலில் வென்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலிலும் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய இரண்டு பேரும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் இவர்கள் களமிறங்க உள்ளனர். ஒருவேளை இவர்கள் எம்பி ஆகும் பட்சத்தில் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்வார்கள். அதன்பின் அந்த தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் வரும்.
நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி எம்எல்ஏவாக உள்ள நிலையில் திருநெல்வேலி எம்பி தேர்தலில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில், அவர் கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் வானதி சீனிவாசன் போட்டியிடாத பட்சத்தில் அங்கே அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கிட்டத்தட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டார். அதோடு கொங்கு மாவட்டங்களில் பாஜக வெல்வது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளையும் ஜேபி நட்டா பாஜக நிர்வாகிகளுடன் மேற்கொண்டு உள்ளார்.
அந்த ஆலோசனையில், கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். முக்கியமாக கோவை, நீலகிரியில் வென்றே ஆக வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளுங்கள். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம். நீங்கள் தேர்தல் மீது கவனம் செலுத்துங்கள் என்று நட்டா கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
இதற்கு இடையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.
அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் ஆ. ராசா – எல் முருகன் இடையே போட்டி நிலவும் பட்சத்தில் இங்கே அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன.