இடதுகை, வலதுகை யாரா இருந்தாலும் கமலாலயத்திற்கு வாங்க : அழைப்பு விடுத்து விசிகவினருக்கு சவால் விட்ட அண்ணாமலை..!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 3:45 pm
Annamalai and Thiruma - Updatenews360
Quick Share

மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடியும் அம்பேத்கரும் ஒரே பாதையில் பயணிக்கிறார்கள் என்ற வகையில் இளையராஜா கூறினார். இதுதொடர்பாக இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினரும், ஆதரவு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து சமூகவலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, பாஜக தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து விவாதிக்க நான் தயார் என அண்ணன் திருமாவளவனை அழைக்கிறேன். அவர் சொல்லும் இடத்தில் அவர் சொல்லும் நேரத்தில் விவாதிக்கலாம் என்று கூறினார்.

அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய திருமாவளவன், அம்பேத்கர் பற்றி பேச மோடியே தகுதியற்றவர் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற புத்தகத்தை மோடி, அமித் ஷா படித்திருப்பார்களா? வாதம் செய்ய வேண்டுமானால், மோடிக்கும் திருமாவளவனுக்கும் இடையே வாதம் நடக்கட்டும் என்று கூறியிருந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்க சந்தித்த அண்ணாமலை, விவாதிப்பது குறித்து திருமாவளவனிடம் இருந்து பதில் வரவில்லை என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, #இந்துமதத்தின்புதிர்கள் (Riddles in Hinduism) நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம்.

நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா? என பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் வன்னி அரசுவின் கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம்.
நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம்.
அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன். அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது @BJP4TamilNadu அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு! தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்! என பதிவிட்டுள்ளார்.

Views: - 493

0

0