அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய கோரி மனு : சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அவசர விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 11:57 am

அதிமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை மறுதினம் (23ஆம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்தது. இதனால் கட்சியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஓபிஎஸ் தரப்பு இரட்டை தலைமை தொடர வேண்டும் என்றும், இபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றன. இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கை முன் கூட்டி விசாரிக்க வேண்டும் என்று, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரியமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவரே இல்லை எனவும், அவரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, அனைத்து மனுதாரர்களும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமென அதில் முறையீடு செய்யப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுப்பட்டது.

அத்துடன், உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் இருவரும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!