கையாலாகாத திமுக ஆட்சி… நம்பர் 1 முதல்வர் என கூறி நாடகம் : பாஜக பிரமுகர் கொலை.. அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2023, 10:43 am

கடந்த 2012 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடியும், தொழிலதிபருமான பிபிஜிடி குமரனின் நெருங்கிய உறவினர் பிபிஜிடி சங்கர்.
இவர் மீது ஏற்கனவே பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் காரில் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது , நசரத்பேட்டையில் வழி மறித்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளது. இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரம் சென்று நின்று விட்டது.

பயந்து போன பிபிஜிடி சங்கர் காரில் இருந்து இறங்கி உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க சாலையில் ஓடியுள்ளார்.அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை விரட்டி சென்று வெட்டி படுகொலை செய்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாஜக ஊராட்சி மன்ற தலைவர் கொல்லப்பட்டது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர் அவர்கள், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது.

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்

உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழக பாஜக போராட்டம் நடத்தும் என்று எச்சரிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!