அமைச்சர் கீதாஜீவன் VS சசிகலா புஷ்பா… தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் கார் மீது தாக்குதல்… பாஜகவினர் திரண்டதால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
22 December 2022, 5:19 pm

அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பேசிய பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் கார் கண்ணாடிகளை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தூத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார்.

பின்னர், சசிகலா புஷ்பா பேசியதாவது:- ஒன்றரை வருடம் திமுக ஆட்சியில் ஒன்றும் கிழிக்கவில்லை. சுய புராணம் பாட தகுதி உள்ளவர் அண்ணாமலை. ஆகவே, அவரை புகழ்கிறோம். முழு தகுதி பெற்றவர் அவர், பாஜக தலைவர் அண்ணாமலை எந்த கோர்ட் வாசலிலும் சொத்து குவிப்பு வழக்குக்கு நிற்கவில்லை. குற்றவாளிகளை கொண்டு போய் நிறுத்தி தான் பழக்கம், குற்றவாளியாய் நின்று அவருக்கு பழக்கம் இல்லை என்று பேசினார்.

Geetha_jeevan_ - updatenews360

மேலும், அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதற்கு பதிலடி கொடுத்து பேசிய அவர், நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது என சாடினார். அவரது இந்தப் பேச்சு திமுகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மடத்தூர் ரோட்டில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டை அடித்து நொறுக்கினர்.

இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள், முன்பக்கத்தில் இருந்த சேர்கள் ஆகியவை உடைத்து நொறுக்கப்பட்டன. மேலும், வீட்டின் முன்பகுதியில் இருந்த சசிகலா புஷ்பாவின் கார் கண்ணாடியும் உடைத்து சூறையாடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாஜகவினர் சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய சசிகலா புஷ்பா திமுகவின் மூத்த நிர்வாகிகளை ஒருமையில் விமர்சித்ததாகவும், அதற்குப் பதிலாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அங்கு கூடிய பாஜகவினர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 507

    0

    0