அவசர அவசரமாக பிரதமரை சந்திக்கிறார் அண்ணாமலை : தமிழக பாஜகவில் நெருக்கடியா..? பரபரப்பில் அரசியல் களம்..!!

Author: Babu Lakshmanan
18 March 2023, 5:09 pm
Quick Share

அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேச இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்தே எதிர்கொள்ள வேண்டும் என்று இருகட்சியும் கூறி வந்தனர்.

ஆனால், அண்மை காலமாக அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளின் தலைவர்களும் சரமாரியாக பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா..? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று இருதரப்பினரும் அதற்கு விளக்கம் கொடுத்து வந்தனர்.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது அண்ணாமலைக்கு மேலும் உஷ்ணத்தை கூட்டியது. அதிமுகவில் இணைந்த முன்னாள் நிர்வாகிகள், திராவிடக் கட்சிகள் இல்லாமல் பாஜகவால் வளர முடியாது என்றெல்லாம் கூறி உசுப்பேற்றினர்.

இதனிடையே, சென்னையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது ;- தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் ‘பிஸி’யாக இருப்பேன், எனக் கூறினார்.

மாநில தலைவர் அண்ணாமலை பேசியது கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அனைத்து இடங்களிலும் பக்குவமாக பேசும் அண்ணாமலை, திடீரென இப்படி பேசுவதற்கு காரணம் என்ன..? என்று தொண்டர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

அண்ணாமலையின் முடிவு இதுவாக இருந்தாலும், டெல்லி தலைமையின் எண்ணமோ அதிமுக கூட்டணியை தொடர வேண்டும் என்பதாகத்தான். அதேவேளையில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், ஒரு சில தொகுதிகளை மட்டுமே தருவார்கள்,
அதற்காக கையேந்த வேண்டுமா…? என்ற எண்ணம் அண்ணாமலையிடம் ஓடுவதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவில் என்.டி.ராமராவ் அசைக்க முடியாத தலைவராக இருந்தபோதும் பாஜகஎ தனித்து போட்டியிட்டு 6 எம்.பி. தொகுதிகளையும், 22 எம்.எல்.ஏ. தொகுதிகளையும் கைப்பற்றியது. அதன்பிறகு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து, தற்போது வரை அங்கு பாஜகவுக்கு எந்தவித வளர்ச்சியும் இல்லை. அப்படி ஒரு நிலை தமிழகத்திலும் வர வேண்டுமா? என்பது அண்ணாமலையின் கேள்வியும் கூட.

பல்வேறு தலைவர்கள் இருந்த போதிலும், அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகே தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி டெல்லி மேலிடமே உணரத் தொடங்கியது. எனவே, அண்ணாமலையை அவ்வளவு எளிதில் மேலிடம் விட்டு விடாது என்பது நிதர்சனமாக உண்மை.

இந்த நிலையில், வரும் 26ம் தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியையும், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து எடுத்து கூற உள்ளார். இதன் பிறகே, தமிழக பாஜகவின் நிலைமையும், நிலைப்பாடும் தெரியவரும்.

Views: - 74

0

0

Leave a Reply