திமுகவில் தந்தை, மகன், பேரனிடம் கைகட்டி நிற்கனும்… ஆனால், பாஜகவில் அப்படியில்லை : அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
16 June 2022, 10:16 am
Quick Share

எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளர் நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், பாஜக வேட்பாளர்களை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து விடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் இன்று பாஜகவில், அதன் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது :- மோடி என்பவர் பாஜகவில் ஒரு தொண்டன். அவர் பிரதம மந்திரியாக வேலை செய்கிறார். தாய் மொழி, கலாச்சாரம் எல்லாத்தையும் தாண்டி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் பாஜகவை ஏற்றுக்கொண்டனர். எனவே, அவரவர் மொழிக்கு உரிய மரியாதை தரப்படும். அவரவர் மாநிலங்களில், அவரவர் இருக்கவேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அனைவரும் தேசிய வாதியாக இருக்க வேண்டும்.

ஆன்மீக அரசியல் என்பது இந்து மதத்தையோ, இஸ்லாம் மதத்தையோ அல்லது கிறிஸ்தவ மதத்ததையோ சார்ந்தது அல்ல. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இன்றி இருக்க வேண்டும். அதுவே ஆன்மீக அரசியல். எல்லா கட்சிகளிலும் ஓனர் இருப்பார்கள். முதலில் அவர் தந்தையிடம் கைகட்டி நிற்க வேண்டும், பிறகு மகனிடம் கைகட்டி நிற்க வேண்டும். பின்னர் பேரனிடம் கைகட்டி நிற்க வேண்டும். டெல்லியிலும், கோபாலபுரத்தில் அதன் ஓனர்கள் இருப்பார்கள்.

ஆனால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் நிலை உள்ளது. எனவே யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது, என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- ஜனாதிபதி யார் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். பாஜகவில் 49 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளர் நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. பாஜக வேட்பாளர்களை வைத்தே நாங்கள் தனியாக ஜெயித்து விடுவோம், என்றார்.

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து கேட்டதற்கு, “அதிமுகவை பொறுத்தவரை அவர்களுடைய கட்சிகளை எப்படி நடத்த வேண்டும், எப்படிப்பட்ட தலைவர்கள் இருக்க வேண்டும் என முழுமையாக தீர்மானிக்க கூடிய சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. எந்த கட்சிகள் கருத்தைக் கூறினாலும், அது சரியாக இருக்காது. அதிமுக ஒற்றைத் தன்மை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது, என அவர் தெரிவித்தார்.

Views: - 461

0

0