கனவுல கூட இனி வீடு கட்ட முடியாது.. மக்களே சிந்தியுங்கள் : தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் : இபிஎஸ் பிரச்சாரம்!
Author: Udayachandran RadhaKrishnan2 April 2024, 10:01 pm
கனவுல கூட இனி வீடு கட்ட முடியாது.. மக்களே சிந்தியுங்கள் : தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் : இபிஎஸ் பிரச்சாரம்!
கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
பின்னர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய போது, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, பாலியல் வன்முறை அரங்கேறி வருகிறது.மேலும் போதைபொருள் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
வாக்கு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்.தி.மு.க. பதவியேற்ற மூன்று மாதங்களில் என்ன செய்தார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். மன்னராட்சி, அரச பரம்பரை போல ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் தி.மு.க.வில் பதவிக்கு வருகிறார்கள்.
ஊழல், கடன்வாங்குவது,போதைபொருள் விற்பனையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. போதைபொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது. நம்பிள்ளைகளை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தி.மு.க. அரசால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவரே அதை குடித்து இறந்தார். அவருக்கு ரூ.10 லட்சம் தருகின்றனர்.
தி.மு.க. அளித்த 520 தேர்தல் அறிக்கைகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. சிமெண்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமானபொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. நீ்ட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசும் தி.மு.க.வும் தான். நீட் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்தது அ.தி.மு.க.,தான். நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க. தற்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடி நாடகமாடுகிறது.
பெட்ரோல்,டீசல் விலையை தமிழகத்தில் குறைப்பதற்கு தி.மு.க அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.தி.மு.க பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன நன்மையை செய்துள்ளது. நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து விட்டது, வீடு கட்டுவோர் கனவில் தான் கட்ட முடியும். அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க மிகவும் வலிமையான கட்சி அ.தி.மு.க. மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என பேசினார்.
0
0