இப்படித் தான் சட்டப்பேரவையை நடத்த வேண்டுமா..? தமிழக அரசின் ஆணவப்போக்கு ; மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்…!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 12:58 pm

மீண்டும் மீண்டும் தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுவதும் படிக்காமல், அதில் குறிப்பிட்டிருந்த திருக்குறளை மேற்கொள்காட்டி வெறும் 4 நிமிடங்களை உரையை வாசித்து விட்டு அமர்ந்தார்.

தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகவும், அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும் என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, அரச தயாரித்த உரையின் உண்மைத் தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் கூறினார். மேலும், தேசிய கீதத்தை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் என பலமுறை கூறியதாகவும், ஆனால், அதனை நடைமுறைப்படுத்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இறுதியில், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் உரையை முடித்தார்.

மேலும், அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கிய போது, தேசிய கீதம் வாசிக்கப்படும் முன்பு அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை அவமானப்படுத்திய தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- மீண்டும் மீண்டும் தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு சட்டபேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள் மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார், அதை கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவபோக்கு மிகவும் கண்டனத்துக்கு உரியது.

தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், ஆளுநர் அவர்களை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் போல எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்பது போல செய்கிறார். இது தான் ஜனநாயகமா ? இப்படி தான் மக்கள் போற்றும், சட்டபேரவையை நடத்தப்பட வேண்டுமா ? தேசிய கீதத்தை புறக்கணித்து, மாண்புமிகு ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா…?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!