மீண்டும் விளம்பரமா..? சிங்கார சென்னை திட்டம் என்ன ஆச்சு..? CM ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
5 December 2023, 5:30 pm

முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப போர்க்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள் என தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முதல்வர் ஸ்டாலின் அவர்களே விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப போர்க்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள். மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை நகரமே கடுமையான பதிப்பிற்குள்ளாகியுள்ளது. 4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

2015-ல் 28 முதல் 34 சென்டிமீட்டர் மழை பெய்தது. தற்போது பெருங்குடியில் மிக அதிகமாக 45 சென்டிமீட்டர் பெய்துள்ளது. ஆனால் சென்னை முழுவதும் பரவலாக 20 முதல் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டை விட பாதிப்பு அதிகம். அப்படி இருக்கையில் 4000 கோடி பணிகளால்தான் பாதிப்பு குறைவு என கூறுவது எப்படி? 2021ல் சென்னையில் பெருமழை பெய்தபோதும் முந்தைய அரசை குறை கூறினார். தற்போதும் இதே பதிலை தான் கூறுகிறார். கடந்த 27 வருடத்திற்கு முன்னர் 1996ல் தொடங்கபட்ட சிங்கார சென்னை திட்டம் என்ன ஆனது ? அதன்பின் கிட்டத்தட்ட 12 வருடங்கள் தி.மு.க ஆட்சி இருந்தது. தற்போதும் ஆட்சியில் உள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.

கடந்த 1967 ல் கூவம் சுத்தம் செய்யப்போவதாக கூறி ஒரு திட்டத்தை அறிவித்தார் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. சுத்தம் செய்யும் வேலை எப்போது நிறைவடையும் என்று சட்டசபையில் கேள்வி கேட்ட போது, மூன்று நாட்கள் கழித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி கூவத்தில் சுத்தம் செய்யும் வேலையை நிறுத்தப்போவதாக கூறினார். அதற்கு காரணமாக கூவத்தில் முதலை இருக்கிறது என கூறினார். திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மூன்று கோடி முதற்கட்ட பணிக்கே செலவானது எனவும் கூறினார்.

50 ஆண்டுகளாக கூவத்தை சுத்தம் செய்யவில்லை. கடந்த மாதம் சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் Chennai Rivers Transformation Company என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. திமுக ஆட்சி வரும்போது எல்லாம் கூவம் சுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படும். ஆனால் கூவமும் சுத்தமாகவில்லை. சென்னையும் சிங்கார சென்னை ஆகவில்லை. எப்போதுதான் சென்னைக்கு விடிவுகாலம் பிறக்கும்.

சிங்கார சென்னை திட்டத்திற்கு ஒதுக்கிய நிதிக்குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாராக உள்ளாரா முதல்வர் ஸ்டாலின்? இல்லை இதுவரை திமுக ஆட்சியில் ஆறுகளை தூர்வாரவும் கூவத்தை சுத்தப்படுத்தவும் ஒதுக்கியுள்ள நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கை விட தயாரா? இவ்வாறு கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம். அரசியல் விளம்பரம் தேடாமல் தற்போது உள்ள சூழ்நிலையினை கருத்தில் கொண்டு புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள். விளம்பரம் தேடாமல் வெள்ளத்தில் சிக்கி முடங்கியிருக்கும் மக்கள் இயல்புநிலை திரும்ப நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?